
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம், தேர்தல் நெருங்குது… பல அறிவிப்புகள் வரும். மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு என்ற இலவச திட்டத்தோடு ஆளுக்கொரு பொண்டாட்டியைக் கூட இலவசமாகக் கொடுப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அரசின் இலவசத் திட்டங்களோடு, பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி.சண்முகத்தைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் க்லந்துகொண்ட ஏராளமான பெண்கள் சி.வி.சண்முகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது மாநில துணைசெயலாளர் மேரி கூறுகையில், ‘சி.வி.சண்முகம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டிக்கிறோம். முதலமைச்சர் பெண்களுக்கு பல இலவசத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருக்கிறார்.
இதனால் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த இலவசத் திட்டங்களோடு, தேர்தல் காலங்களில் பொண்டாட்டியை இலவசமாகக் கொடுப்பதாக சி.வி.சண்முகம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பெண்கள் என்ன போதைப் பொருளா? இலவசப் பொருளா? பெண்களை துச்சப்படுத்தி ஆணாதிக்கம் என்ற சமுதாயத்தை காட்டியிருக்கிறார். எனவே, சி.வி.சண்முகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார்.
சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர் கீதாஜீவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள் எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிச்சாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


