எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – டிடிவி சூசகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, பிள்ளை பிடிப்பதைபோல மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களைப் பிடிக்கும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது.

பாஜக கூட்டணியை விட்டு ஓபிஎஸ் விலகிச் சென்றது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவர் விலகிச் சென்றதற்கு காரணமானவர்கள், அவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டணியில் உள்ள அரசியல் கட்சியினரை திமுக கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சராக அமித் ஷா யாரை அறிவிக்கின்றாரோ, அந்த நபர் அமமுக ஏற்றுக் கொள்கின்ற நபராக இருக்கும்பட்சத்தில் அந்த முதலமைச்சரை ஆதரிப்போம்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஜெயலலிதாவின் தொண்டராக இருந்தவர். அதே மனநிலையில்தான் இன்றும் இருக்கிறார். அதேநேரத்தில், அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் எவர் ஒருவரையும் ஒப்பிட்டுப் பேசுவதை விரும்ப மாட்டார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் தமிழர்கள் சென்று குடியேறி இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டு வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதைபோல, தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குளறுபடி நடப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில், கூட்டணி சார்பில் முதலமைச்சராக அமித்ஷா யாரை அறிவிக்கிறாரோ? அவரை ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லாமல் அமித்ஷா அறிவிக்கிற நபர் அமமுக ஏற்றுக்கொள்கிற நபராக இருக்கும் பட்சத்தில் ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இதன்மூலம்,தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற நிலை மாறும் என்பதைத்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.இதனால் அதிமுக மற்றும் அக்கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response