மதிக்காத பிரதமர் ஆதரவாளர்கள் அதிருப்தி – எடப்பாடி தவிப்பு

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், வஉசி துறைமுகத்தில் 3 ஆவது வடக்கு சரக்கு தளம் உள்ளிட்ட மொத்தம் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு மற்றும் துவக்க விழா ஜூலை 26 அன்று நடந்தது. இதில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து தனி விமானத்தில் இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்றார்.

அங்கு அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதேபோல், எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை வரவேற்றார். அப்போது கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து மகிழுந்து மூலம் திருச்சி ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குச் சென்று தங்கினார்.

முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் சில வார்த்தைகள் பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் ஒரு மனு அளித்தார். அதில், “விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் இராணுவ வழித்தடத்தை அமைக்க வேண்டும். இராணுவ தளவாடத்தை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமரை வரவேற்ற போது, ‘‘உங்களைத் தனியாகச் சந்தித்து சில விசயங்கள் பேச வேண்டும்’’ என்று எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதை பிரதமர் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகிய பிறகு மதுரை திருமங்கலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, உதயகுமாரை அழைக்காமல் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதனை அழைத்துசென்றது தென்மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயகுமார் ஓரங்கட்டப்படுகிறாரா, அவருக்கு கல்தா கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதேபோல், தன்னைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதியையும் அவர் கழற்றி விட்டுவிட்டு மற்ற 3 பேருடன் சென்று பிரதமரை வரவேற்றது அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் பிரதமரிடமிருந்து சரியான மதிப்பு கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இன்னொரு பக்கம் தம் ஆதரவாளர்களின் அதிருப்தி ஆகிய இரண்டெ விசயங்களாலும் நிம்மதியின்றி இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

Leave a Response