பீகாரில் 66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் மிகப்பெரிய மோசடி – ப.சிதம்பரம் தாக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 இலட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் பாமஉ, மாங்குடி சமஉ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் கார்த்தி சிதம்பரம் பேசுகையில்,

ஐந்து சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு, நாட்டுக்கு 12 சதவீத மருத்துவர்களை உருவாக்கி வருகிறோம். இது தொடர வேண்டும் என்றால் தமிழ்நாடு தொடர்பான விசயங்களில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் தமிழர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.

பின்னர் ப.சிதம்பரம் பேசியவது….

இருபது ஆண்டுகளுக்கு முன், இந்த அளவுக்கு சிறுநீரகம் பாதிப்பட்டோர் இல்லை. ஆனால், தற்போது 100 பேரில் ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கு இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர்தான் காரணமா? என்று தெரியவில்லை.

அரசு கட்டிடங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் தரமாகக் கட்டவேண்டும். புதிதாக கட்டப்பட்ட பாலங்கள், கட்டிடங்கள் 4 நாட்களில் இடிந்து விழுகின்றன.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, தாஜ்மஹால் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கட்டிடக்கலை மீது பழுது இல்லை, கட்டிடக் கலைஞர்கள் மீதுதான் பழுது உள்ளது. கட்டிடக்கலை விதிப்படி ஒப்பந்ததாரர் கட்டிடத்தைக் கட்டினால் நிச்சயம் 50 ஆண்டுகள் கட்டிடம் நிலைத்து நிற்கும் என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது…

மகாராஷ்டிரா மாநிலத்தில் போலி வாக்காளர்களைச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பீகாரில் செய்ய முடியாமல், வாக்காளர்களை நீக்கியுள்ளனர். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன், வாக்காளர் பட்டியலைத் திருத்தியது தவறு. 66 இலட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி.

மேலும், அம்மாநில நிரந்தர குடியுரிமையுள்ள பலர் வெவ்வேறு மாநிலங்களில் பணி செய்கின்றனர். அவர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க பீகாருக்குச் செல்ல மாட்டார்களா? மக்களவைத் தேர்தல் முடிந்த 12 மாதத்துக்குள் 22 இலட்சம் பேர் இறந்துவிட்டார்களா? இந்த வாக்காளர் பட்டியலை வைத்துத்தானே மோடி பிரதமரானார்.

போலி வாக்குப் பதிவைத் தடுக்க வேறு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் புல்டோசர் வைத்து வாக்காளர் பட்டியலை மாற்றம் செய்கிறது. அதற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி. தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் புத்தி இருக்கு. எதிர்ப்பு தெரிவிப்போருக்கு புத்தி பேதலிச்சு போச்சா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Response