அமித்ஷா கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகச் சென்ற அதிமுக – தொண்டர்கள் கவலை

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பரப்புரை மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்றார்.

அதன்பின், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குச் சென்றார். குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் பேசுகையில்….

அமித் ஷா பாகிஸ்தான் அமைச்சரல்ல, அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர். அவரை நான் சந்தித்ததை கள்ளத்தனமாக சந்தித்ததாக உதயநிதி கூறுகிறார். அமித் ஷா வீட்டுக் கதவைத் தட்டினால் எந்தத் தவறும் இல்லை. அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால் தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் போது, ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காலில் அணிந்து இருந்த செருப்பைத் தூக்கிக் காட்டினார்.உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை அப்படியே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பேச்சு,இப்போது அதிமுக முழுமையாக அமித்ஷா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்பதையே காட்டுகிறது என்றும் இது அதிமுகவின் எதிர்காலத்துக்குப் பேராபத்து என்றும் அக்கட்சியின் மூத்த தொண்டர்கள் கவலையுடன் சொல்கின்றனர்.

Leave a Response