தமிழீழத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் 11.04.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது…..
அரசியலில் பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கி பௌத்த சிங்களப் பேரின வாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பி மாத்திரமே.
தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த சிங்கள பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கியது ஜே.வி.பி மாத்திரமே.
ஜே.வி.பி இன் முன்னணி அமைப்புகளில் மகளிர் அணி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிகளுடன் மூன்றாவதாக பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியும் உருவாக்கப்பட்டது.
இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலத்தில் இந்திய விஸ்தரிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழின விரோதப்போக்கை சிங்கள மக்களிடையே இந்தப் பிக்குகள் அணியின் மூலமே ஜே.வி.பி விதைத்தது.
அமெரிக்கா இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதித்துள்ள அதியுயர் வரியை ஜனாதிபதி அனுரகுமர திஸநாயக்க கொரோனாவுக்கும் சுனாமிக்கும் நிகரானதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்தப் பொருளாதார நெருக்கடியை நாம் தேசமாக ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையைச் சுனாமி தாக்கியபோது நாடுதழுவிய ரீதியில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுதலைப்புலிகளுடன் செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தத்தை அடியோடு ஜே.வி.பி நிராகரித்துப் பேரணிகளை நடாத்தியது.
அப்போது சுனாமி நெருக்கடியை தேசமாக எதிர்கொள்ளவிடாது ஜே.வி.பியை தடுத்தது தமிழின விரோதப்போக்கேயன்றி வேறென்ன?
ஜே.வி.பி தன்னை வெளிப்பார்வைக்கு ஒரு இடதுசாரி அமைப்பாகக் காட்டிக்கொண்டாலும் அது உண்மையான மார்க்சியக் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மார்க்சியத்தினதும் சிங்களத் தேசியவாதத்தினதும் கலவையாக இருந்த ஜே.வி.பி பின்னர் முழுமையாக சிங்கள தேசியவாதக் கட்சியாகவே மாறியது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நோர்வேயின் மத்தியஸ்த்தத்தை எதிர்த்துத் தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்தது. இராணுவத் தீர்வை வெளிப்படையாகவே முன்வைத்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை போரைத் தொடங்குமாறு வலியுறுத்தியது. இந்த கடும் தேசியவாதப் போக்கே ஜே.வி.பியை ஒரு சிங்கள தேசியச் சக்தியாக உருவெடுக்க வைத்து இன்று அதற்குப் பெரும் வெற்றியையும் தேடிக்கொடுத்துள்ளது.
இப்போது ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியை அணிந்துகொண்டாலும் அதன் உண்மையான முகம் மாறப்போவதில்லை. ஜே.வி.பி இன் முகப்பூச்சை நம்பி தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு வாக்களித்திருந்தார்கள்.
ஜே.வி.பி ஆட்சி பீடம் ஏறி இவ்வளவு மாதங்கள் கடந்த பின்னருங்கூட தமிழின விரோதச் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டமைக்காகச் சிறு வருத்தங்கூட தெரிவிக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வ அணுகு முறைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை. தொடர்ந்தும் ஜே.வி.பியை நம்பாமல் உள்ளூராட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் ஜே.வி.பியை அடியோடு நிராகரிக்கவேண்டும்
இவ்வாறு அவர் உரையாற்றினார்.