அண்ணாமலை பேசும்போது காலி நாற்காலிகள் – படம்பிடித்த பத்திரிகையாளருக்கு அடிஉதை

திருச்சி, மன்னார்புரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழிக்கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் கறுப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொணடு பேசினர்.

இக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசத் தொடங்கும் போது, கூட்டத்தில் இருந்த பாஜக கட்சியினர் இருக்கையில் இருந்து எழுந்து கலைந்து செல்லத் தொடங்கினர். கூட்டத்தில் கட்சியினர் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன.

அந்நேரம், பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதையும் அப்போது கலைந்து சென்ற கூட்டத்தையும் தினகரன் புகைப்படக்காரர் சுந்தர் படம் பிடித்தார். இதைப் பார்த்த பாஜக கட்சியினர், புகைப்படக்காரையும், முன்னணி தொலைக்காட்சி நிருபரையும் அடித்து உதைத்தனர். மேலும் அவரது கேமிராவை பறித்து உடைத்தனர்.

பாஜகவினரின் இந்தத் தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு திருச்சி பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response