சசிகலாவுடன் மறைமுக பேச்சுவார்த்தை – எடப்பாடி பேச்சில் வெளிப்பாடு

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது….

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான அறிவிப்பாகத் தான் பார்க்க முடிகிறது. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது.

தொகுதி மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அதில் காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டிருந்தால், முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சி பலனளிக்கும் என்று சொல்லலாம்.

நாடாளுமன்றத் தொகுதி வரையறை தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி, திமுக ஆட்சியின் இலஞ்சம், ஊழலை மறைக்க நடத்தப்பட்டது. மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தியின் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது நிருபணம் ஆகியுள்ளது.

என்றார்.

அப்போது அவரிடம் சசிகலா,ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறதே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு, அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இயக்கம். இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

அதேபோல் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக பாமக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறதா? என்று கேட்டதற்கு,

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும்போது, அது குறித்த முடிவினை தெரிவிப்போம் என்றவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எங்களுடன் எதுவும் பேசவில்லை.நாங்களும் பேசவில்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரியை முறியடிக்க வியூகம் அமைத்து, அதிக வாக்குகள் பெற்று எதிரியை வீழ்த்துவது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பற்றி அவர் கூறும்போது, அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இன்றுவரை இல்லை என்றார்.எப்போதும் அவர்களைச் சேர்க்கமாட்டோம் என்று கூறிவந்தவர் நேற்று பேசும்போது இன்றுவரை இல்லை என்று சொன்னது கவனிக்கத்தக்கது.

இன்றுவரை இல்லையெனில் நாளை இருக்கலாம் என்று பொருள்.அவர்களுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response