தமிழீழத்தைச் சேர்ந்த காங்கேசன்துறை தையிட்டியில் திஸ்ஸ ராஜ மகா விகாரையை அமைப்பதற்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக மாதந்தோறும் முழுநிலவு நாளில் தையிட்டி விகாரை முன்பாகக் காணிச் சொந்தக்காரர்களும், பொதுமக்களும்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த முழ்நிலவு நாளன்றும் [ 13-03-2025] போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இன்னொரு தமிழ்த் தேசிய அமைப்பான, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் கலந்து கொண்டது.அவ்வமைப்பின் சார்பாக அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தையிட்டி விகாரை வடக்கில் உள்ள மிகப்பெரிய கூட்டுப் படைத்தளத்தின் எல்லைக்குள் படையினரால் கட்டப்பட்டு அவர்களினாலேயே பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
தமிழ் மக்கள் கௌதம புத்தரை ஒருபோதும் புறத்தியாகப் பார்ப்பதில்லை.தமிழ் மக்கள் பௌத்தத்தை ஒருபோதும் ஒரு பகை மதமாகக் கருதியது இல்லை.ஒரு காலத்தில் அவர்கள் மத்தியில் பௌத்தம் இருந்திருக்கிறது.தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை, குண்டலகேசி ஆகிய இரண்டு காப்பியங்களும் பௌத்த காப்பியங்கள்தாம்.
அந்தவகையில் தையிட்டியில் நடைபெற்றுவரும் போராட்டம் புத்த பெருமானுக்கோ அல்லது புத்த மதத்துக்கோ எதிரானது அல்ல. மாறாக, பௌத்தத்தை முன்னால் வைத்துக் கொண்டு தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருப்பதும் ஆக்கிரமிப்பு செய்வதற்கான வழிகளில் ஒன்றாக பெளத்த மதத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வருவதையே தமிழ் மக்கள் எதிர்த்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தங்கள் நில மீட்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.இப்போராட்டம் வலுப்பெற வேண்டும் இதற்கு தமிழீழ அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்திருக்கின்றன.