தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்நேரத்தில் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். அவையை துணைத் தலைவர் பிச்சாண்டி அவையை நடத்தினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு சமஉக்கள் ஆதரவு தெரிவித்தனர்.தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளனர். இரு கட்சிகளின் உறுப்பினர்களும் பேரவைக்கு வரவில்லை.
தீர்மானத்தின் மீது நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கினார் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி.
டிவிஷன் வாக்கெடுப்புக்காக பேரவைக் கதவுகள் அடைக்கப்பட்டன. டிவிஷன் முறையில் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர்.
டிவிஷன் வாக்கெடுப்பிலும் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நுட்பமாக வைத்த சோதனையை செங்கோட்டையன் எளிதில் வென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது….
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அப்பாவுக்கோ திமுகவுக்கோ எதிரானதன்று. செங்கோட்டையனுக்கு பின்னப்பட்ட வலை. எவ்வளவோ சமாதானம செய்தும் செங்கோட்டையன் இறங்கி வரவில்லை என்பதா்ல் இப்படி ஒரு தீ்ர்மானம் கொண்டு வந்து அதற்கு ஆதரவாக செங்கோட்டையன் வாக்களிக்காமல் போனால் அதைக் காரணம் காட்டி அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கணக்குப் போட்டார். அதற்காகவே டிவிஷன் வாக்கெடுப்பும் கோரினார்.அதை உணர்ந்து கொண்ட செங்கோட்டையன் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து எடப்பாடி பழனிச்சாமி பின்னிய வலையிலிருந்து தப்பிவிட்டார் என்று சொல்கிறார்கள.