பாஜக தோற்க இன்னும் 5 விழுக்காடுதான் வேண்டும் – குஜராத்தில் இராகுல் பேச்சு

இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள இராகுல் காந்தி, அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது….

குஜராத்தில் காங்கிரசு ஆட்சியை இழந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் இங்கு வரும்போதெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கிறோம். நாம் நமது கடமைகளை நிறைவேற்றும்வரை, குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றிபெற வைக்கமாட்டார்கள். நாமும் ஓட்டுப்போடுங்கள் என மக்களிடம் கேட்கக் கூடாது. நாம் நமது கடைமைகளை நிறைவேற்றும்போது, குஜராத் மக்கள் காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது நிச்சயம்.

குஜராத் காங்கிரசில் இரண்டு விதமான தலைவர்களும், நிர்வாகிகளும் உள்ளனர். ஒரு பிரிவினர் மக்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அவர்களுக்காகப் போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறவர்கள், காங்கிரசு சித்தாந்தத்தை மனதில் வைத்திருப்பவர்கள். மற்றொரு வகையினர், மக்களை மதிக்காமல், அவர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்காக வேலை செய்பவர்கள். அவர்கள் களையப்பட வேண்டும்.

நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றாத வரை குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றி பெறச் செய்யமாட்டார்கள். நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்றாத வரை எங்களைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்கவும் முடியாது. பொறுப்புகளை நாம் நிறைவேற்றும் நாளில், குஜராத் மக்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

குஜராத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் சிறு வணிகர்கள், சிறு – குறு தொழில்முனைவோர்களே. அவர்கள் இன்றும் துன்பத்தில் உள்ளனர். புதிய தொலைநோக்குப் பார்வை வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுக்கிறார்கள். காங்கிரசுக் கட்சியால் அந்த தொலைநோக்குப் பார்வையை வழங்க முடியும். ஆனால் அதற்கு முன்பாக நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

குஜராத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 40 சதவீத வாக்குகள் உள்ளன. வெற்றி பெறுவதற்கு நாம் இன்னும் 5 சதவீதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும். தெலங்கானாவில் நாம் 22 சதவீதம் வாக்குகளை அதிகரித்துள்ளோம். அதனை நாம் இங்கேயும் செய்ய முடியும். அதற்கு முன்பு கட்சிக்குள் களையெடுக்கப்பட வேண்டும்

இவ்வாறு இராகுல் காந்தி பேசினார்.

Leave a Response