
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறினார்.
ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
உடனடியாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது….
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி. நாங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தயவுசெய்து கல்வியில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். இதில் தமிழ்நாட்டின் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு நாங்கள் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது.
ஒரு மாதத்திற்கு ரூ.76 கோடி மதிப்பிலும், ஒரு ஆண்டுக்கு ரூ.912 கோடி மதிப்பிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். ஐசிடி மூலமாக பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவது, 25% குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி பயில செய்வதற்காக என அரசு வழங்கும் தொகை மட்டும் ரூ.400 கோடியை தாண்டும். இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் 60%, 40% என ஏற்கிறது. இதை நாம் கூறினால், ஏன் மும்மொழி கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? எனக்கேட்கின்றனர். தமிழ்நாட்டு மண்ணின் உணர்வு தனிப்பட்டது.
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன உங்களுக்கு பிடிவாதம் எனக்கேட்கின்றனர். அது நமக்கு தேவையிலாத ஒன்று என்பதால் தான் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழிக் கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். கல்வி என்பதை எடுத்துக்கொண்டோமானால் அவர்கள் கூறும் சமக்ரசிக்ஷா அபியான் என்ற திட்டத்தில் கூறப்படும் புறநிலை கூறுகளில் கேரளா 20க்கு 20 இடங்களை பிடித்து முதல் இடத்திலும், தமிழ்நாடு 19 இடங்களையும் பிடித்துள்ளது. 8 இடங்கள் பெற்றுள்ள குஜராத், 3 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் வெறும் 2 இடங்கள் மட்டுமே பிடித்துள்ள பீகார் ஆகிய மாநிலங்களுக்கெல்லாம் உங்கள் நிதியை வழங்கியுள்ளீர்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது, மற்றொரு மொழிப்போருக்கு வழி வகுக்கும் என்பதை நான் பகிரங்கமாக கூறிக்கொள்கிறேன். எனவே இதில் காலம் தாழ்த்தாமல், ஏதோதோ சாக்கு போக்கு கூறாமல் எங்களுக்கு வரவேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை உடன் விடுவிக்க வேண்டும். அவர்களின் திட்டத்தை ஏற்காவிட்டால் நிதியளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை ஏற்க முடியாது. 2018 ஆம் ஆண்டு முதல் எஸ்எஸ்ஏ என்ற இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 2023 க்கு மட்டும் தர மறுப்பதும், சட்டம் குறித்து பேசுவதும் சரியல்ல. இந்த சட்டம் முன்னர் எங்கே சென்றது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது…
“They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…
இவ்வாறு அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.


