பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில்,பல்கலைக்கழக மானியக்குழு
(யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் சார்பில் சட்டப்பேரவையில் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியறுத்தப்பட்டது.
இது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், திமுக மாணவரணி சார்பில் யுஜிசியின் வரவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
பிப்ரவரி 6 அன்று காலை, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஆ.இராசா, திருச்சி சிவா, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் இராகுல்காந்தி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தின் போது, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இராகுல்காந்தி பேசியதாவது…
அனைத்து மாநிலங்களின் ஒற்றுமையே இந்தியா என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால், அதற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வரலாற்றை அழிப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய இலக்காக உள்ளது. அரசியலமைப்பை சிதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 4 ஆயிரம் ஆண்டு வரலாற்றை கொண்ட தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை மிக முக்கியமானது. எனவே. யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், யுஜிசி வரைவு அறிக்கை மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்றார்.
வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்….
தலைநகரில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் திமுக மாணவரணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள்.
பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது. ‘‘யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்விசார்ந்த நகர்வல்ல, அது தமிழ்நாட்டின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும்”என இராகுல் காந்தி மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.
நீட், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் 3 வேளாண் சட்டங்கள் வரை நமது அரசியலமைப்பினையும் பன்மைத்துவத்தையும் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் திமுக முன்னின்று நடத்தியுள்ளது. இன்று தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.