“விடுதலை – 2” திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் அவர்களுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஈரோடு கிளையின் சார்பாக பெரியார் மன்றத்தில் பாராட்டு விழா 17/01/2025 அன்று முற்பகல் நடைபெற்றது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சார்ந்த வி.பி.குணசேகரன் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை சேர்ந்த எம்.தங்கராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உரை ஆற்றினார்.
இறுதியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஏற்புரை வழங்கினார்.
அவரது உரையில் குறிப்பிட்டதாவது ……
பொதுவாக எனது திரைப்படம் வெளியானதும் நான் அது குறித்த விழாக்கள் எதிலும் பங்கேற்பதில்லை. அது பற்றிய கலந்துரையாடலில் கூட நான் கலந்து கொள்வதில்லை. இந்தப் பாராட்டு விழாவில் பேசுவதற்குக் கூட எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது.
விடுதலை – 2 திரைப்படம், எனது தனிப்பட்ட படைப்பல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. இந்தப் படைப்பை உருவாக்குவதற்கு நான்கு ஆண்டுக் காலம் தமிழ்த்தேசியம் குறித்தும், மார்க்சியம் குறித்தும் நிறையப் படித்தோம். பலரிடம் இது குறித்து விரிவாக விவாதித்தோம். அவற்றை உள்வாங்கிக் கொண்டு தோரணமாகக் கட்டினோம்.
இப்படம் வெளிவந்த பொழுதுதான் யாரெல்லாம் நம்மோடு நிற்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
இதில் வரும் வாத்தியார் பாத்திரம் தனிமனிதர் அல்ல. முகம் தெரியாத அற்புதமான தோழர்களின் மொத்த உருவமாக அவர் விளங்குகிறார்.
இப்படம் பற்றிய விவாதம் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
விடுதலை – 2 திரைப்படத்தின் நீட்சியாக உடனடியாக அடுத்த படம் வரப்போவதில்லை. பின்னாளில் ஒரு சமயம் அப்படி வரக்கூடும். ஆனால் விரிவான காட்சிகளோடு இப்படம் ஓடிடி தளத்தில் ( Extended version ) வர இருக்கிறது.
இப்படத்திற்காக நிறையச் சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு விளையாட்டில் பங்கேற்கும் பொழுது, அதன் விதிகளுக்கு உட்பட்டுத்தான் விளையாட வேண்டும். அரசுக்கு எதிரான விசயங்களைத் தணிக்கைத் துறை அனுமதிக்காது. எனவே எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகச் சவால்கள் இருக்கும். இந்தச் சட்டகத்திற்குள் நமது கருத்துக்களைச் சேதாரமில்லாமல் மக்களிடையே கொண்டு சேர்க்கும் செய்நேர்த்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலை – 2 படம் ஒரு கூட்டு வெற்றி.(Team achievement ) அனைவருக்கும் நன்றி எனச் சுருக்கமாகத் தனது ஏற்புரையை முடித்துக் கொண்டார்.
– கண.குறிஞ்சியின் பதிவிலிருந்து.