தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
இவர்,தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கால கட்டமான 2013 ஆம் ஆண்டு, பிரபல தனியார் நிறுவனம் சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட அனுமதி கோரியது.
இதற்காக அந்த நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பித்து இருந்தது. 2013 இல், இந்த நிறுவனம் விண்ணப்பித்த போதிலும் சுமார் 3 ஆண்டுகள் அத்திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு அத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. இந்த அனுமதியை வழங்க அப்போதைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு மிகப் பெரிய தொகை இலஞ்சமாக தரப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில்,
வைத்திலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்துக்கு கடன்போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.27.9 கோடி தரப்பட்டதாகவும் அந்த நிறுவனம் திடீரென கடனை திருப்பி தரமுடியவில்லை என்று நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இலஞ்ச பணத்தைப் பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சி பாப்பாகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. அதில்,வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் மற்றும்
வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. குறிப்பாக 2011 – 2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக வைத்திலிங்கம் ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தது.
இதுஒருபுறம் இருக்க, சட்ட விரோத பணப் பரிமாற்றம் பிரிவின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதுமட்டும் அல்லாமல் வைத்திலிங்கம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பல ஆவணங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், வைத்திலிங்கத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடியே 92 இலட்சம் மதிப்புள்ள 2 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இப்போது, தமிழ்நாட்டில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைத்து அதன்பின் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது எனவும் அதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் தம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது பாஜக வகுத்துள்ள வியூகம்.
அதைச் செயல்படுத்த,ஈரோடு இராமலிங்கம் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை ஒன்றிய அரசு செய்துவருகிறது.
அதன் வெளிப்பாடுதான், அண்மையில் ஈரோடு இராமலிங்கம் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை,இப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை மூலம் முடக்கியிருப்பது ஆகியன என்கிறார்கள்.
இந்நிகழ்வுகள், கடும் நிபந்தனைகள் விதிக்காமல் ஒருங்கிணைய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் செய்தி என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.