இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்களே தடை – மோடியை நேரடியாக விமர்சித்த பிரபலங்கள்

இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாதப் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும்,இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒன்றிய அரசின் திட்டக் குழு முன்னாள் செயலாளர் என்.சி.சக்சேனா, முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இங்கிலாந்துக்கான முன்னாள் இந்திய தூதர் சிவ் முகர்ஜி, முன்னாள் இராணுவ துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சமீருதீன் ஷா உள்ளிட்ட 17 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில்,

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் இந்து-முஸ்லிம் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் போக்குகள் சில மாநிலங்களில் அதிகரித்துள்ளன.

குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசே எழுந்து நிற்கும் சூழல் இதற்கு முன்பு இருந்ததில்லை. மதச் சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளன. மாட்டிறைச்சி என்ற பெயரில் கும்பல் தாக்குதல்கள், இஸ்லாமிய எதிர்ப்பு உரைகள் மற்றும் முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

பழங்கால மசூதிகள் மற்றும் தர்காக்களின் சொத்துகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும். வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும், சில நீதிமன்றங்கள் இத்தகைய கோரிக்கைகளை அனுமதிப்பதால் தேவையற்ற பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அனைத்து மாநில அரசுகளும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் பன்முகக் கலாசாரத்தை உறுதிப்படுத்த அனைத்து மதங்களின் மாநாடு நடத்தப்பட வேண்டும். வளர்ந்த நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு வகுப்புவாத வன்முறை பெரிய தடையாக உள்ளது

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், இஸ்லாமியருக்கு எதிராக இதுவரை பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகியனவே செயல்பட்டு வந்தன.இப்போது அனைவருக்கும் பொதுவான அரசாங்கமே அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் கவனம் ஈர்க்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.இது நாட்டு மக்களை யோசிக்க வைக்கும் கருத்தாகவும் அமைந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response