இசுரேல் விசயத்தில் இப்படியா? இதுதான் பாஜகவின் சுதர்மமா? – பெ.ம காட்டம்

இசுரேலுடன் தூதரக உறவைத் துண்டித்து, பாலத்தீன ஹமாஸ் அரசை இந்தியா ஏற்க வேண்டும் என தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

கடந்த 11 மாதங்களாக யூத இனவெறி இசுரேல் ஆட்சியாளர்கள் முசுலீம்களின் பாலத்தீனத்தின் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தி, இனப்படுகொலை செய்து வருகிறார்கள். உண்மையில் பார்த்தால், அது மிகக் கொடிய மனிதகுல அழிவுக் கொலைகள்!

வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த யூதர்கள் 1948 இல் வட அமெரிக்காவின் படைப் பாதுகாப்புடன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, தங்கள் தாயகமாக இசுரேல் நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். எஞ்சியுள்ள முசுலிம் பாலத்தீனர்களின் தாயகத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ள இசுரேல் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.பல்லாயிரக்கணக்கில் பாலத்தீனர்களைப் படுகொலை செய்து வருகிறது.

பாலத்தீனத் தாயகத்தைப் பாதுகாக்க முசுலிம்கள் பி.எல்.ஓ., ஹமாஸ் போன்ற விடுதலைப் படைகளை உருவாக்கித் தற்காபப்புப் போர் நடத்தி வருகிறார்கள்.இசுரேலிய யூதர்கள் தொடர்ந்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் பதிலடி கொடுக்க கடந்த 2023 அக்டோபர் 4 அன்று, திடீரென்று ஹமாஸ் படையினர் இசுரேலுக்குள் புகுந்து குண்டு வீசிப் போர் நடத்தி 1,200 யூதர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தி, புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இசுரேல் படைகள் வெளியேறினால், பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து,போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளத் தயார் என்று ஹமாஸ் பல தடவை அறிவித்துவிட்டது.ஆனால், வட அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், செர்மனி போன்ற மேற்கு நாடுகளின் முழுமையான போர்ப் பங்களிப்பு மற்றும் நிதியளிப்புத் துணிச்சலில் இசுரேல் ஞாயமான உடன்படிக்கைக்கு வர மறுக்கிறது.வட அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக வல்லரசுகள் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டாம் என்று இசுரேலைத் தூண்டி வருகின்றன.

போர் மற்றும் மனித அழிவுத் தொழில் நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற யூதர்கள், மக்கள் பயன்படுத்தும் கைப்பேசி போன்ற பழைய பேஜர் என்ற தகவல் பரிமாற்றக் கருவிக்குள் வெளியே தெரியாமல் வெடி மருந்துகளைப் பொருத்தி,அவற்றை லெபனான், சிரியா போன்ற பாலத்தீன ஆதரவு நாடுகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள்.பேஜர் என்பது கைப்பேசி வருவதற்கு முன் கையில் வைத்துப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவில் வரும் தகவல் கருவி!

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா என்ற விடுதலைப் படை அமைப்பும், யேமன் மற்றும் சிரியாவில் செயல்படும் ஹூத்தி என்ற விடுதலைப் படையும் பாலத்தீனர்களுக்கு ஆதரவாகவும், இசுரேலுக்கு எதிராகவும் உள்ளன. அந்தப் படையினர் இசுரேலின் தொழில்நுட்ப உளவுக் களவுக்கு அஞ்சி, கைப்பேசியைப் பயன்படுத்தாமல், பழைய பேஜர் கருவிகளை வரவழைத்துப் பயன்படுத்துகின்றனர். இதைத் தெரிந்து கொண்டு, பேஜர் கருவிகள் தயாரிக்கப்படும் தைவான் போன்ற நாடுகளில் செயல்படும் அக்கருவிகளின் உற்பத்தித் தொழில் கூடங்களில் ஊடுருவி, ஹிஸ்புல்லா, ஹூத்தி அமைப்பினருக்கு ஏற்றுமதியாகும் பேஜர் கருவிகளுக்குள் வெடி மருந்து இணைத்து அனுப்பியுள்ளனர். அதேபோல், இந்த விடுதலைப் படைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாக்கி டாக்கிக் கருவிகளிலும் வெடிமருந்து இணைத்து அனுப்பியுள்ளனர்.

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய பேஜர்கள் 17.09.2024 அன்று வெடித்து பலர் அந்த இடத்திலேயே இறந்தார்கள். 2,750 பேர் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அடுத்து, யேமனிலும் சிரியாவிலும் இக்கைக் கருவிகள் வெடித்துப் பலர் இறந்துள்ளனர்; பலர் படுகாயமுற்றுள்ளனர்.

பதினோரு மாதங்களாக அன்றாடம் மனிதப் படுகொலைகள் செய்து, பல இடங்களில் பிணக் குவியல்களையும் வேறு பல இடங்களில் உயிர் பிழைக்க ஒளிந்து கொண்டுள்ள மனிதக் குவியல்களையும் பாலத்தீனம் கண்டு வருகிறது.

மனித உரிமைகள் பேசும் அமெரிக்க – ஐரோப்பிய நாடுகள், இசுரேலின் இந்த மனிதப் படுகொலைப் போருக்கு, இசுரேலுக்கு ஆயுதமும் நிதியும் வற்றாமல் வழங்குகின்றன. அதேபோல் உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டித் தருகின்றன.

இந்திய அரசு பொத்தாம் பொதுவில் போர் நிறுத்தம் கோரிக் கொண்டு, இசுரேல் ஆதரவு நிலையிலேயே செயல்படுகிறது. நேற்று (19.09.2024 அன்று) ஐ.நா.வின் பொதுப் பேரவையில், காசாவை ஆக்கிரமித்துள்ள இசுரேல் – காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் பாலத்தீனத்தால் கொண்டு வரப்பட்டது. 124 நாடுகள் ஆதரித்து வாக்களித்து,அதைப் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றியுள்ளன.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்துள்ளது. இது என்ன மனித நேயம்? பா.ச.க. கூறும் “சுதர்மம்” இது தானா?

காசாப் பகுதி, பாலத்தீனத்தின் இதயம் போன்றது. அது இசுரேல் – பாலத்தீன எல்லைச் சிக்கலுக்கு அப்பாற்பட்டது. அதைக் கிட்டத்தட்ட ஓராண்டாக ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை அங்கு அன்றாடம் நடத்தி வருகிறது இசுரேல்! பெய்ரூட் தொடங்கி சிரியா வரையிலான மக்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைககளும் எப்போது எங்கு எது வெடிக்குமோ என்று அச்சத்தோடு வாழ்கிறார்கள்.

பா.ச.க. 1999-இல் இந்திய ஆட்சிக்கு வருவதற்கு முன் இசுரேல் நாட்டை இந்திய அரசு ஏற்கவில்லை. காரணம், இசுரேல் – பாலத்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டதுதான்!

அதேவேளை, யாசர் அராபத்தின் பாலத்தீன விடுதலை இயக்கத்தை (பி.எல்.ஓ.) இந்திய அரசு ஏற்று, அதன் தூதரகத்தைப் புதுதில்லியில் வைத்திருந்தது.ஆனால்,அதே காங்கிரசுக் கட்சித் தலைமை இப்போது அமைதி காக்கிறது.

மிகமிகக் கொடிய மனிதப் பேரழிவை – மனிதப் படுகொலைகளை அன்றாடம் நிகழ்த்தி வரும் இசுரேல் நாட்டுக்கு வழங்கியுள்ள ஏற்பிசைவை இந்திய அரசு இரத்துச் செய்ய வேண்டும்.ஐ.நா.வும், உலக நாடுகளும் இசுரேல் நாட்டை, பயங்கரவாத நாடு என அறிவிக்க வேண்டும். மற்ற நாடுகளும் இசுரேலுக்கு வழங்கியுள்ள ஏற்பிசைவை இரத்துச் செய்யுமாறு இந்திய அரசு கோர வேண்டும்; பாலத்தீன ஹமாஸ் அரசுக்கு இந்தியா ஏற்பிசைவு வழங்கி, எல்லா உதவிகளும் செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response