தமிழ்நாட்டில் தமிழீழம் – தமிழீழ சோமுவுடன் ஓர் உரையாடல்

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக்கான கருவிப்போர் முடிவுற்றது. அதன்பின் தமிழீழம் குறித்து யாரும் பேசக்கூட மாட்டார்கள் என்று நினைத்த சிங்களர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் வகையில் உலகெங்கும் தமிழீழ ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும் அந்தச் சூடு குறையவே இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் ஒரு நாள் நாளேடுகளில் தமிழீழ சோமு என்கிற பெயர் நிறைந்திருந்தது.

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத்தலைவர் பொறுப்பைத் திறம்பட ஆற்றிவரும் சோமசுந்தரம்தான் தன் பெயரை தமிழீழ சோமு என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்.

அவரைச் சந்தித்து உரையாடினோம்.

அந்த உரையாடல்…

1.உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்?

தமிழீழ சோமு(எ)லோ.சோமசுந்தரம்,த/பெ சோ.லோகநாதன்,தாய் லோ.ரோகினி (மறைந்துவிட்டார்),மனைவி ஜெயஶ்ரீ,
மகன் இன்பன்,அக்கா லோ.ரம்யா
இப்போது மதிமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பொறுப்பிலும் அவல்பூந்துறை பேரூராட்சி துணைத்தலைவராகவும் செயலாற்றி வருகிறேன்.

2. பொது வாழ்க்கைக்கு வந்தது மற்றும் மதிமுகவில் இணைந்தது எப்போது?

1998 கோவை குண்டு வெடிப்பு சமயத்தில் அங்கே ராமகிருஷ்ணா பள்ளியில் படித்து வந்தேன். அப்போது ஏற்ப்பட்டது தான் அரசியல் தாக்கம். ஆதிக்கத்திற்க்கு எதிராக இருப்பது,பாதித்த மக்களுக்காகக் குரல் கொடுப்பது தான் சரியான அரசியல் என்று நம்புகிறேன்.
என்அப்பா மதிமுக ஆரம்பித்த சமயம் தொட்டு தியாக வேங்கை அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில் இயக்கத்தில் இருந்து வருகிறார்.நான் மதிமுக வில் இணைந்தது 2008. அப்போதிருந்து தீவிரமாக இயங்கி வருகிறேன்.

3. ⁠கட்சிப் பொறுப்புகள்?

முதலில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தேன்,பிறகு ஈரோடு கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தேன்.அதன்பின்இப்போது மாநில இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளேன்.

4. ⁠ஊராட்சி மன்றப் பொறுப்பு மற்றும் செயல்பாடு?

கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
பிறகு திமுக கூட்டணியில் துணைத்தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.அதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன்.எங்கள் பகுதியில் குடிநீர் வடிகால், தார்சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து முடித்து இருக்கிறேன்.அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முதலில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்
மருத்துவ முகாம்கள் நடத்தி இருக்கிறேன்.

5. ⁠தமிழீழ சோமு என்று பெயர் வைக்கக் காரணம்?

தலைவர் வைகோ அவர்களின் தொடர் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு ஈழத்தின் மீது பற்று கொண்டு பெயரை தமிழீழ சோமு என்று மாற்றிக் கொண்டேன். தலைவர் பிரபாகரன் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக அனைத்தையும் ஆயுதமாக மாற்ற வேண்டும் என்று எண்ணி என் பெயரை தமிழீழ சோமு என்று மாற்றிக் கொண்டேன். மக்கள் என் பெயரை அழைக்கும் போது ஈழம் என்ற ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற எண்ணம் பரவும் என்று நம்புகிறேன்.
2009 ஈழத்தில் இனப்படுகொலை நடந்து போது மாபாதகன் ராஜபக்சே முழு உருவ பொம்மையைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டேன் அப்போது இருந்து பெயரையும் மாற்றிக் கொண்டேன்

6. ⁠இந்தப் பெயர் குறித்து வந்த நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள்?

இதுவரை எதிர்மறை கருத்து ஒருவர் மட்டும் தான் சொல்லி இருக்கிறார்.அனைவரும் வரவேற்கவே செய்கின்றனர்.பல இடங்களில் இந்தப்பெயரை இரசித்தனர்.

7. ⁠இந்தப் பெயர் குறித்து உங்கள் தலைவர் வைகோ மற்றும் துரைவைகோ ஆகியோர் கூறியது என்ன?

ஒரு முறை எங்கள் தியாக வேங்கை கணேசமூர்த்தி அவர்கள் தலைவரிடம் இவர் பெயர் தமிழீழ சோமு என்று அறிமுகப்படுத்தினார். அப்போது தலைவர் சிரித்தமுகத்துடன் ஈழம் அமையும் அதை நாம் பார்ப்போம் வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பிறகு என் தொடர் பணிகளைப் பார்த்து மாவட்டத்திற்க்கு இரண்டு தமிழீழ சோமு இருந்தால் என் இலட்சியங்களையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்று கட்சி ஏடான சங்கொலியில் கட்டுரை எழுதினார்.

அண்மையில் அண்ணன் துரை வைகோ அவர்கள் இலண்டனில் இருந்து இணையவழியில் இணையதள அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய போது தம்பி தமிழீழ சோமு போலப் பணி செய்ய வேண்டும் என்று பாராட்டிப் பேசினார்.

8. ⁠ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் போல் தமிழ்நாட்டில் வட இந்தியர் குடியேற்றம் அதிகமாகியுள்ளது பற்றி?

கடந்த பத்து வருடங்களில் தான் வட இந்தியர்கள் குடியேற்றம் அதிமாகி வருகிறது.கோவை மற்றும் சென்னையில் தான் இது அதிமாக உள்ளது.
இது நம் மொழி அழியக் காரணமாக வந்து விடும்.
தேர்தல் ஓட்டுக்கேட்கும் சுவரொட்டிகள் கூட இந்தியில் இருப்பது மிகுந்த மன வேதனை.அரசு இதைக்கண்டு கொள்ளவதில்லை என்பது துயரம்.தோழர் திருமுருகன்காந்தி தான் இதைத்தொடர்ந்து பேசி வருகிறார்.
தபால் துறையில் வடநாட்டவர்கள் மிக அதிமாக வேலையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் இது ஒரு வகையான இன அழிப்பு தான்.
கொத்துக் கொத்தாக வட இந்தியர்கள் இங்கே வருவது வேலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது.

– அ.தமிழ்க்குமரன்

Leave a Response