நிர்மலா சீதாராமன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைவர் வலியுறுத்தல்

கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்துகேள்வி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார் உணவக உரிமையாளர் சீனிவாசன்.

இதனால் அவரை நிதி அமைச்சர் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

அந்த காணொலி வெளியாகி பலத்த சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு…..

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி:

உணவக உரிமையாளர், நமது அரசுஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையை கோரும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது.ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளைப் பெற முற்படும்போது, ​​அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் சொல்வதைக் கேட்டு, ஒரே வரி விகிதத்துடன் கூடியஎளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை இந்த அரசு செயல்படுத்தினால், இலட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீரும்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி:

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரசு தலைவர்செல்வபெருந்தகை:

ஜிஎஸ்டிகுறித்த நியாயமான கோரிக்கையை முன்வைத்ததற்காக உணவக உரிமையாளர் சீனிவாசனை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்க முடியாது. தவிர, பாஜக எம்எல்ஏ மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி நிதி அமைச்சரிடம் அவரை மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். கேள்வி கேட்பவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கை வெளிப்படுத்துகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

கலந்துரையாடலில் உணவக உரிமையாளர் தவறாக எதுவும் பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன்வைத்தார். அதற்காகஅவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமழ்நாட்டு மக்களைக் கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டது பாசிசத்தின் உச்சம். பாசத்தில் மட்டுமல்ல, ரோசத்திலும் அதிகமானவர்கள் கோவை மக்கள். இனி எந்த காலத்திலும் தமிழகத்திலும், கோவையிலும் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

தவறான வரி விதிப்பைத் திருத்த முன்வராமல், முறையிட்டவரை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம். சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழகமக்களையும் அவமானப்படுத் திய மத்திய நிதி அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருட்டினண்….

கேள்வி கேட்பவரை மிரட்டுவது, வாயடைப் பது, மன்னிப்பு கேட்க செய்வது என்பது எதேச்சதிகாரம். மேலிருந்து கீழ்வரை தொடரும் இந்த ஆணவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

ஜிஎஸ்டியால் ஏராளமான வர்த்தகர்கள், மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதைத்தான் மத்திய அமைச்சரிடம் ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார். அவரது கேள்வி நியாயமானது என்பது நாடெங்கும் பரவி விட்டது. ஆனால், அதிகாரம் அவரை பணிய வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response