தனியாகச் சந்திக்க மறுத்த மோடி – எடப்பாடி வருத்தம்

கோவை பீளமேடு கொடிசியா அரங்​கில், தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் கூட்​டமைப்பு சார்​பில் இயற்கை
விவ​சா​யிகள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். இதற்காக நேற்று மதியம் 1.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அங்கு இருந்தார். பின்னர், மாலையில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி கோவை விமான நிலைய வளாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் எனக்கருதி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்படி அந்த அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பார்கள் எனவும், தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி அந்த அறையில் தங்கவில்லை.

இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலைய வரவேற்பின்போதே, ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்திருந்த ஒரு கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார். அவரும் அதை புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். பிரதமர் மோடி டெல்லி திரும்பும்போதும் அவரை வழியனுப்ப எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வந்திருந்தனர். அப்போதும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமியை தனியாகச் சந்தித்துப் பேசவில்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலம் வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் அதிருப்தியில் இருக்கும் பிரதமர் மோடி, எடப்பாடியைத் தனியாகச் சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மோடி தனியாக தன்னைச் சந்தித்தால் தனது கோரிக்கையை ஏற்றதாக எடப்பாடி வெளிக்காட்டிக் கொள்வார். இதனால், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் அதிருப்தியடைவர்கள் எனக் கருதியே மோடி சந்திப்பைத் தவிர்த்தாகக் கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவே தேவை என்று பாஜக மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இது நிறைவேறும் வரை அதிமுக மற்றும் அதிருப்தி தலைவர்களை தனிப்பட்ட முறையில் மோடி சந்திக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. மோடி தனியாகச் சந்திக்காததால் எடப்பாடி கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Response