ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காங்கிரசுக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சிர்க் தலைவர் இராகுல்காந்தி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு சென்றனர்.
ஸ்ரீநகரில் ராஜபாக் பகுதியில் காங்கிரசுக் கட்சியின் முக்கியத் தலைவர்கள், 10 மாவட்டத் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை கார்கே மற்றும் இராகுல் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அப்போது இராகுல்காந்தி பேசியதாவது….
காங்கிரசுக் கட்சியும், அதன் தொண்டர்களும் பிரதமர் மோடியின் நம்பிக்கையை அசைத்துவிட்டனர்.தேர்தலுக்கு முன் அவர் வெளிப்படுத்திய தன்னம்பிக்கையான உடல்மொழியை இழந்துவிட்டார். காங்கிரசு தொண்டர்கள் அவருக்கு மனரீதியாக மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர்.
காங்கிரசு தொண்டர்கள் அவரை அரசியல் சாசனத்தின் முன் தலைவணங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இப்போது இருக்கும் பிரதமர் மோடி,தேர்தலுக்கு முன்பு இருந்த அதே பிரதமர் அல்ல.
காஷ்மீர் மக்களுடனான எனது உறவு அரசியல் தொடர்பு அல்ல.இது அன்பின் உறவு.எனது குடும்பம் உங்கள் மாநிலத்தில் இருந்து வந்தது.எனவே, டெல்லியில் உங்களுக்கு ஒரு சிப்பாய் இருப்பதை நீங்கள் எப்போதும் உணர வேண்டும். நான் உங்கள் சிப்பாய். உங்களுக்கு என்ன தேவையோ, என் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் எனக்கு ஒரு உத்தரவை மட்டுமே கொடுக்க வேண்டும், நான் உங்கள் முன் இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காங்கிரசு தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி ஆகியோர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா,
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரசு கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றார்.