ஈரோடு புத்தகக் காட்சி நடத்தும் ஸ்டாலின்குணசேகரன் மீது திடுக்கிடும் புகார் – விவரம்

ஈரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை எனும் தனியார் அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.அந்தத் தனியார் அமைப்பு பதிப்பாளர்களீடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் அரசாங்க உதவி பெற்று நடத்தப்படும் அந்தக் கண்காட்சியின் கணக்கு வழக்குகள் முறையாக இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பதோடு அக்கண்காட்சியை தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப விவரம்…

பல்லவி பதிப்பகம்

பெறுநர்:

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள். ஈரோடு மாவட்டம், ஈரோடு-11.

ஐயா வணக்கம்

பொருள்: ஈரோடு புத்தகக் கண்காட்சி 2024 மாவட்ட நிர்வாகம் நேரடியாக நடத்த கோருதல் – தொடர்பாக

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் தமிழ்நாடு அரசின் முயற்சியாலும் நிதி உதவியாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தினால் நேரடியாகவும் சில தனியார் அமைப்புகள் மூலமும் இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை காஞ்சீபுரம். திருநெல்வேலி, திருவாரூர், சிவகங்கை,திருவண்ணாமலை, திருப்பத்தார், விழுப்புரம், ராணிப்பேட்டை திருவள்ளூர், நாகர்கோவில், வேலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம் முதலான புத்தகக் கண்காட்சிகளில் அரங்கு வாடகைக் கட்டணம் குறைவாகவும் நியாயமாகவும் அதாவது ரூபாய் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் வரை மட்டுமே உள்ளது.

இதே போல் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும்பான்மையான புத்தகக் கண்காட்சிகளில் இவ்வாறே பத்தாயிரத்திற்கும் குறைவான கட்டணமே இருந்துள்ளதை தங்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு (12/06/2023) அன்று ஆதாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளேன்

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவியுடன் மக்கள் சிந்தனைப் பேரவை என்ற தனியார் அமைப்பு மூலம் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகக் கண்காட்சிகளில் தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகக் கட்டணம் அதாவது ரூபாய் பதினாறாயிரம் முதல் இருபத்து எட்டாயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள், வாசகர்கள் மாணாக்கர்களுக்கான வாகனக் கட்டணம், சிற்றுண்டி உணவுக் கட்டணம் இங்கு மிகவும் அதிகம்.

இந்த தனியார் அமைப்பின் தலைவரான திரு தங்கமுத்து குணசேகரன் அவர்கள் பங்குதாரராக உள்ள பல பதிப்பக நிறுவனங்களுக்கு மட்டுமே 8 அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. உலகத்தமிழர் படைப்பரங்கம், ஈரோடு படைப்பாளர் அரங்கமும் இவரது பினாமி அரங்குகளாகும். இதனால், பல உள்ளூர் மற்றும் வெளியூர் புத்தகப் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் இக்கண்காட்சிகளில் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இதைப் போன்றே, புத்தகக் கண்காட்சி நடத்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விதிமுறைகள் அதாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, நிதி மேலாண்மைக் குழு அமைத்தல், புத்தகக் கண்காட்சிக்காகத் தனியாக வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற எந்த ஒரு அரசின் வழிகாட்டுதல், விதிமுறைகள் ஏதும் இக்கண்காட்சிகளில் பின்பற்றப்படவுமில்லை.

இது குறித்து தங்களிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிகளின் தொடக்கத்தின் போது தக்க ஆதாரங்களுடன் உள்ளூர் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக புகார் மற்றும் கோரிக்கை மனு அளித்திருந்தேன். ஆனால், எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை குறைகளும் களையப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு (2024) ஈரோடு புத்தகக் கண்காட்சியை ஈரோடு மாவட்ட நிர்வாகமே நேரடியாக நடத்த வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு மானியமாகிய பொது மக்களின் வரிப்பணத்திலும் ஏராளமான கொடையாளர்கள் விளம்பரதாரர்களின் மூலம் பெறப்படும் நிதி உதவியாலும் நடத்தப்படும் ஈரோடு புத்தகக் கண்காட்சியை, மாவட்ட நிர்வாகம் நேரடியாக நடத்தினால் மட்டுமே நியாயமான வாடகையில் புத்தகப் பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அரங்குகள் கிடைக்கும் எனவும் உள்ளூர் புத்தகப் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் எனவும் பொதுமக்களும் மாணவர்களும் வாகனக் கட்டணம், உணவுக் கட்டணம் போன்றவற்றை நியாயமான கட்டணத்தில் பெறுவார்கள் என்பதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு தாரை வார்க்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் ஒரு முறை தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இம்முறை, மூன்றாவது ஆண்டாக ஈரோடு மாவட்ட புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வழக்கம் போல் இவ்வாண்டும் எனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டால், இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடர்பாக நான் சமூக ஊடகங்களில், பொதுமக்கள், வாசகர்கள் மற்றும் மாணாக்கர்களுடன் இணைந்து இது குறித்து விவாதிக்கவும் விமர்சிக்கவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு 27-05-2024

நன்றி

தங்களின் உண்மையுள்ள

நல்.நடராசன்

நிர்வாக இயக்குனர்

பல்லவி பதிப்பகம்

ஈரோடு -638153

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response