295 தொகுதிகளில் வெல்வோம் – இராகுல்காந்தி நம்பிக்கை

18 ஆவது மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடைசிக் கட்டமாக நேற்று முன்தினம் அதாவது ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரசு மூத்த தலைவர் இராகுல் காந்தி நேற்று கூறும்போது…

பிரதமர் மோடியின் கற்பனையில் உதித்த தயாரிப்புகள்தான் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள். அவை எல்லாம் மோடி மீடியாவின் கணிப்புகள். அவை கருத்துக் கணிப்புகளே அல்ல. வெறும் கற்பனை என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் ‘‘295’’ என்ற பாடலை மேற்கொள் காட்டினார் இராகுல் காந்தி.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் 182 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கருத்துக் கணிப்பில் 100 இடங்களுக்குக் குறைவாகவே இந்தியா கூட்டணி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 2004 ஆம் ஆண்டு போல் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி நாங்கள் ஆட்சியமைப்போம் என்று சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Leave a Response