அரசியலுக்கு வருவது என்றாலே நேராக முதலமைச்சர் ஆவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் காலம் இது.
இந்தக் காலத்திலும் இன்றைய இளம் தலைமுறையினரும் எண்ணிப் போற்றும் தலைவராகத் திகழ்பவர் கலைஞர்.
இந்தப் புகழ் அவருக்கு சும்மா வந்துவிடவில்லை.
பதினான்கு வயதிலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துப் பொதுவாழ்வில் இறங்கியவர். 31 ஆண்டுக்காலம் பல்வேறு சோதனைகள் அவற்றைத் தகர்த்துச் செய்த சாதனைகள் ஆகியனவற்றோடு தொடர்ந்தது அவரது நெடும்பயணம்.
அதன் விளைவு 33 ஆவது வயதில் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். 1967 இல் முதன் முதலில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான போது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
தனது நாற்பத்தைந்தாவது வயதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்,1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அப்போதிருந்து அவருடைய போர்க்குணத்தின் வீரியங்களை நாடு பார்க்கத் தொடங்கியது.
வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்.
என்று பராசக்தி படத்தில் எழுதியிருந்தார் கலைஞர்.
அந்த வசனங்களில் ஒவ்வோர் எழுத்துக்கும் அவரே எடுத்துக்காட்டு.
சாதீய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தில் அவ்வடுக்கின் கடைசியிலிருந்து வந்து இன்று முதல்நிலைக்கும் முன்னால் என்கிற நிலையிலிருக்கிறார்.தான் மட்டும் வளரவில்லை.தன்னைப் போல் இருந்த இருக்கிற எல்லோரையும் ஏற்றி விடுகிற ஏணிகளை தான் வாழும் காலத்திலேயே உருவாக்கியவர்.அதை அச்சுப்பிசகாமல் கடைபிடிக்கும் அரசியல் தளகர்த்தர்களையும் விட்டுவிட்டே சென்றிருக்கிறார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, சினிமா மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியது கலைஞர்தான். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.1952 பராசக்தி படத்தில் கைரிச்ஷாவை ஒழிக்க வேண்டும் என்ற வசனம் எழுதியிருப்பார். அதை அப்படியே 17 வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்து உண்மையாக்கிக் காட்டினார் என்றார்.
கலைஞர் செய்த சாதனைகளில் இது ஒரு துளி.
அவர் முதலமைச்சரானதும் இன்றைக்கு வரை இந்திய ஒன்றியம் எட்ட முடியாத பல செயல்களைத் தமிழ்நாட்டில் செய்து காண்பித்தவர் கலைஞர்.
2018 இல் தான் இந்திய ஒன்றியத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969 இலிலேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.அதற்குக் காரணம் கலைஞர்.
1970 ஆம் ஆண்டு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.
1971 ஆம் ஆண்டு அவர் தலைமையிலேயே தேர்தலைச் சந்தித்து ஆட்சியைப் பிடிக்கிறது திமுக.இரண்டாவது முறை முதலமைச்சராகிறார் கலைஞர்.
பேரறிஞர் அண்ணாவின் முதலாவது நினைவு நாளின்போது, ஒன்றிய அரசு அவரது புகைப்படத்துடன் அஞ்சல் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்தப் புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார். அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த அஞ்சல் தலையில் இருக்கும் என்பது அவருடைய தொலைநோக்குச் சிந்தனை.
1969 இல் மத்திய – மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973 இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றியவர் கலைஞர்.
இந்தத் தீர்மானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி மாநில உரிமைகளுக்கு வித்திட்ட முதல் முதலமைச்சர் கலைஞர்.
இன்று மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முழக்கங்களைக் கேட்க முடிகிறது. இதற்கு முன்னோடி கலைஞர்தான்.
1974 ஆம் ஆண்டுக்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுநர்தான் அதைச் செய்வார். 1974 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கலைஞர்,குடியரசுநாளில் குடியரசுத்தலைவர் கொடியேற்றுகிறார். விடுதலை நாளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் கொடியேற்றுகின்றனர்.அதுபோல் மாநிலங்களிலும் விடுதலைநாளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் கொடியேற்றுவதுதான் பொருத்தம் என்று வாதாடி வென்றார்.
அதனால் இந்திய ஒன்றியம் முழுதும் மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கலைஞரே,இந்தியாவில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர் எனும் பெருமைக்குரியவர்.
தமிழர் உரிமை, மாநில உரிமை ஆகியனவற்றைச் சிந்தித்த அதேநேரம், சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏற்றத்தாழ்வுகளைக் களைய வாழ்நாளெல்லாம் இயங்கியவர் கலைஞர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை முதல் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்தார் கலைஞர்.
அதன்விளைவாக மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில்,
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது ஆகியன பெண்ணுரிமைக்கான, சமூகப் புரட்சிக்கான அடையாளங்கள்.
இவற்றிற்கெல்லாம் உச்சமாக பெண்களுக்கும் சொத்தில் சம்பங்கு எனும் சட்டத்தை இயற்றி மாபெரும் மாற்றம் செய்தவர் மாண்புமிகு கலைஞர்.
சாதிகளால் பிளவுண்டு நிற்கும் தமிழ்ச்சமுதாயத்தை காலப்போக்கில் சாதீய வேறுபாடுகள் களைந்து ஒருங்கிணைக்க கலைஞர் மனதில் உதித்த மாபெரும் திட்டம் சமத்துவபுரம்.
அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி, அந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்துச் சாதியினருக்கும் இலவசமாய் வீடுகள் ஒதுக்கித் தரப்படுகின்றன.
1998 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 17 ஆம் தேதி கலைஞர் அரசால் முதல் சமத்துவபுரம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே,மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
இப்படி அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் அதிகாரக்குவிப்புக்கு எதிராக எல்லோரையும் சமப்படுத்தும் மாபெரும் பொதுவுடைமையாளராகச் செயல்பட்டவர் கலைஞர்.
பின்னாட்களில் மென்மையான போக்கைக்கடைபிடித்தாலும் தொடக்கக் காலத்தில் மூர்க்கத்தனமாகப் போராடினார் கலைஞர்.
இதனால் சாதீய அடுக்கின் உச்சாணியில் அமர்ந்து அனைவரையும் ஏய்த்துப் பிழைத்துக் கொண்டு அரசியல் அதிகார மட்டத்திலும் தந்திரமாக முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் கலைஞரைக் கண்டு திடுக்கிட்டனர்.
இவரை இப்படியே விட்டால் நாம் திரும்பவும் கைபர் போலன் கணவாய் வழியே வெளியேற வேண்டியதுதான் என்று பயந்து போன அந்தக் கூட்டம் அவருடைய அரசியலை விட்டு விட்டு அவருடைய சமுதாயப்பணிகளைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு அவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் வாழ்நாள் முழுக்க வன்மங்களைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றனர்.இன்றளவும் பெரும்பான்மை ஊடகங்கள் அவர்கள் கையிலேயே இருப்பதால் அவர்கள் எண்ணியதை ஈடேற்ற முடிந்தது.
கலைஞரால் பலன்பெற்றவர்களே அவர் அருமை புரியாமல் பிதற்றுவோர் எண்ணிக்கையும் இருக்கிறது.
ஆனால் எல்லாவற்றையும் புன்னகையால் எதிர்கொண்டு வெல்லும் திறன் படைத்த அவர் இந்த நூற்றியொன்றாம் வயதிலும் எதிரிகளுக்கு அச்சமூட்டுபவராகவும் நமக்குத் தெம்பூட்டுபவராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
– நன்றி
கலைஞரின் செம்மொழி