18 ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்கட்சி சார்பில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.இரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக தொடர்ந்த வழக்கில், கடந்த தேர்தல்களில் ஒரு விழுக்காட்டுக்கு அதிகமாக வாக்குகள் பெற்றது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில்தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் இரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காட்டுமன்னார்கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது.அப்போதும் அக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.