தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (பிப்ரவரி 22) வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது….
இந்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் ஒரு கோடியே 4 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு அரசின் திட்டம் சென்று கொண்டிருக்கிறது.இதனால் தான் விவசாயிகள் எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நெல் விலையை சன்னரகத்திற்கு 70 ரூபாயிலிருந்து 107 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மோட்டாரக நெல்லுக்கு 50 ரூபாயிலிருந்து 82 ரூபாயாக ஒரு குவிண்டாலுக்கு இங்கே வழங்கப்படுகிறது.
கரும்பு விலையைப் பொறுத்தவரை கடந்த அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் கரும்பு ஆலை முடக்கப்பட்டு, கரும்பு விலை ஏற்றப்படாமல் இருந்தது.அப்போது 95,000 ஹெக்டேர் நிலத்தில் தான் கரும்பு பயிர் செய்தார்கள்.முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் இப்போது ஒன்றரை இலட்சம் ஹெக்டேர் அளவுக்குக் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது தான் ஒன்றிய பாஜக ஆட்சியில் அடுத்த அக்டோபரில் கரும்பு விலை உயர்வு வருகிறதாம்.25 ரூபாய் ஒரு டன்னுக்கு கூடுதலாக்கி,அக்டோபர் மாதம் அறிவிக்கிறார்கள்.ஆனால்,நம் முதலமைச்சர் இந்த நிதிநிலை அறிக்கையிலே 25 ரூபாய் கூடுதலாக வழங்கியிருக்கிறார்.
பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் மூலம் 25.12 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.வறட்சி மற்றும் வெள்ள நிவாரணமாக 12.58 இலட்சம் பேருக்கு ரூ.940 கோடி தரப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் ரூ.65 கோடியில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தியதன் மூலம் நடப்பாண்டு 9.38 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 2020-21வரை, சாகுபடி பரப்பு 61.56 இலட்சம் ஹெக்டேராக இருந்தது.இப்போது திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு காலத்தில், 62.60 இலட்சம் ஹெக்டர் அளவுக்கு,கடந்த ஆட்சியை விட ஒரு இலட்சம் ஹெக்டர் அளவுக்கு சாகுபடி நிலங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல்,அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு மொத்தம் 2 இலட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன.திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 2 இலட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்த விவசாய இலவச மின் இணைப்புகள் எண்ணிக்கை 23.37 இலட்சமாக உள்ளது.
ரேஷனில் தேங்காய் எண்ணெய் கொடுத்தால்,அந்த விவசாயம் செய்கின்ற மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் என்பதால் அந்தத் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.