தமிழ் மொழியைக் காக்க அதிகாரம் மிக்க ஆணையம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர்-50” மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.மதுரை தமுக்கம் கலையரங்கில், 24.01.2016 காலை 9.45 மணியளவில், மதுரை தமிழர் பண்பாட்டு கலைக்குழு போர்ப்பறை அதிர பேரெழுச்சி முழக்கங்களுக்கிடையே “மொழிப்போர் 50“ – மாநாடு தொடங்கியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

அவர் பேசுகையில், “தாய்மொழிக்காகப் பல நூறு உயிர்களை ஈந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனங்கள் உலகில் வேறெங்கும் இல்லை. 1965ஆம் ஆண்டு மொழிப்போரில், பொள்ளாச்சியில் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் இல்லை. தற்போது தமிழ்நாடெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நினைவிடங்கள், மொழிப் போர் ஈகியரின் நண்பர்கள், குடும்பத்தினர் எழுப்பியவை. அவை அரசு எழுப்பியவை அல்ல என்பது வேதனை தரும் உண்மை.

அயல்மொழிகளான இந்தியும் சமற்கிருதமும் பல்வேறு வகையில் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மொழிக்காக உயிரீகம் செய்த முன்னோடிகளின் வரலாற்றை நம் இதயத்தில் ஏந்துவது இன்றைய இளைஞர்களின் கடமையாகும். எனவே, மொழிப்போர் குறித்த வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழியைக் காப்பதற்கென்று கன்னட அதிகாரம் என்ற அமைப்பு செயல்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் அதிகாரம் மிக்க தமிழ் வளர்ச்சி ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அனைத்து மட்டத்திலும் தமிழே ஆட்சி, அலுவல், கல்வி, வழிபாடு, பண்பாட்டு மொழியாகத் திகழ்வதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாளை மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம். இந்நாளை, இனி நாம் “தமிழ் மொழி நாள்“ என்று அறிவித்து கடைபிடிக்க வேண்டும். இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தின் வரலாற்றை வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்வதோடு, தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசே எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Leave a Response