முல்லைப்பெரியாறு பகுதியில் காவல்நிலையம் அமைத்த கேரளாவுக்கு எதிராக வழக்கு

முல்லை பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிய காவல் நிலையம் அமைத்ததற்கு எதிராக தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு புதிதாக ஒரு காவல் நிலையத்தை அமைத்து உள்ளது. முல்லை பெரியாறு பிரதான அணைப்பகுதி, பேபி அணை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் இந்த புதிய காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.

இதில் ஒரு ஆய்வாளர், இரண்டு துணை ஆய்வாளர்கள் மற்றும்  20 காவலர்கள் நியமிக்கப்படுவதாகவும் கேரள அரசு அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் சார்பில் அரசு வழக்குரைஞர் பி.பாலாஜி ஆஜராகி முறையீடு செய்தார்.

அவர் தன்னுடைய முறையீட்டில் கூறியதாவது:–

முல்லை பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த தறுவாயில் கேரள அரசு, பிரச்சினைக்குரிய முல்லை பெரியாறு அணைப்பகுதியில் இப்படி ஒரு காவல் நிலையத்தை அமைத்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். எனவே, இதற்கு தடை விதிக்கக்கோரும் வகையில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம். இந்த மனுவையும் விரைவில் விசாரிக்க ஆவண செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.

மேலும் முல்லை பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு கோரும் தமிழக அரசின் இடைக்கால மனுவுடன் இந்த கூடுதல் மனுவும் இணைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

 

Leave a Response