
தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்போது, ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக சித்தா, ஆயூர்வேதா போன்ற மருத்துவங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
‘நமக்கு நாமே’ விடியல் மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக திமுக மருத்துவ அணி சார்பில் மருத்துவத் துறையினர்களுடனான கருத்தரங்கை கோவையில் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:
‘நமக்கு நாமே’ பயணத்தில் இதுவரை 215 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களிடம் இருந்து 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகம் ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துவர்களும், மருத்துவத்துறையின் சேவையும் மக்களின் நண்பனாக இருக்க வேண்டும். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாச்சரம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் 31 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. இறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சத்துணவு கூடை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இங்கு, 80 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டிய நிலையில் 56 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது. இதனால் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. கிராம மக்கள் கேள்விபடாத நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தடுக்க மாநில அளவிலும், பின் தேசிய அளவிலும் சுகாதார கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
தரமான சிகிச்சை, முறையான சோதனை போன்ற அனைத்து வசதிகளும் மாநகரங்களிலும், நகரங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திமுக ஆட்சி அமையும் போது மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படும்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான சிகிச்சை வழங்க உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக சித்தா, ஆயூர்வேதம் போன்ற மருத்துவங்களுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களை கிராம அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதில் உள்ள போலிகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


