இந்திய ஒன்றியம் முழுவதும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் 22 ஆவது சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட ஆணையத்துக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…..
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக, மக்களவையில் 3 ஆவது இடத்தில் உள்ளது. இது, சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சி. பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கு, சம்பிரதாயம், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பிறப்பின் அடிப்படையிலான வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக வலிமையாக குரல் எழுப்பி வருகிறது. சாதி கடந்து அனைவரும் சமமாக வாழ, திமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.
அதே நேரம், இந்திய ஒன்றிய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை திமுக ஆதரித்து வந்துள்ளது.
பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் – ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் உருவாகும்.
எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய தனிநபர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சி என்பதால், பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. இதை அமல்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையது அல்ல.
தவிர, பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.
அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசும்போது, ‘‘பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள், இதைப் பின்பற்றலாம்’’ என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், ஏற்காதவர்கள் மீதும் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. அடிப்படை உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் சட்டத்தையும் திமுக ஏற்காது.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினார். அதுபோல, பலதார மணத்தைத் தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றலாம்.
மதங்களுக்கு இடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முன்பு, இந்து மத சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதிய ஏற்றத் தாழ்வை ஒன்றிய அரசு சமன் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் எந்தச் சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றக் கூடாது. இந்தப் பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பின் சட்டப் பிரிவுகளை மீறுவதாக திமுக பார்க்கிறது.
தமிழ்நாடு மக்கள்தொகையில் இந்துக்கள் 87%, இஸ்லாமியர்கள் 6%, கிறிஸ்தவர்கள் 7% உள்ளனர். அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய ஒற்றுமைக்குப் பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும். எனவே, இதற்கு அனுமதி வழங்க கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.