அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் வெகுமக்களின் கவனம் பெற்ற துறை அமலாக்கத்துறை.
அந்த அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா (63) கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த 2020 ஆம் ஆண்டு முடிந்தது. அதன்பின் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது மோடி அரசு. அப்போதே அதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் அவர் பதவிக் காலம் முடிய 2 மாதங்கள்தான் இருந்தது. அதனால் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அப்போதே அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கூறியிருந்தது.
இந்நிலையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி அமலாக்கத் துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவி காலத்துக்குப் பின்பு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதன்படி மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் மிஸ்ராவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3 ஆவது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம். அவர் வரும் 31 ஆம் தேதிக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும்’’ என்றனர்.
சர்ச்சைக்குரிய இந்த சஞ்சய் குமார் மிஸ்ரா 1984 ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. அமலாக்கத்துறையில் நியமிப்பதற்கு முன்பாக அவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்தார். இவர் அமலாக்கத் துறை இயக்குநரான பின் இந்திய ஒன்றியம் முழுதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களை விசாரணை என்ற பெயரில் மிரட்டி வந்தார் என்று குற்றம் சொல்லப்பட்டது.
ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போதும் மூன்று முறை பதவி நீட்டிப்புப் பெற்ற சஞ்சய்குமார் மிஸ்ரா, இப்போது செந்தில்பாலாஜியைத் தொட்டதால் கெட்டார் என்கிற கருத்துகள் வருகின்றன.