
மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து சனவரி 3–2016 ஆம் தேதி மரணமடைந்தார். மழை காரணமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொதுப்பாதை வழியாக, உடலை எடுத்துச்செல்ல கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை கடந்த 4–ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தலித் முதியவரின் உடலை பொதுப் பாதை வழியே எடுத்து செல்ல, சாதி இந்துக்கள் மறுத்ததை அடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று புதிய பாதை அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், முதியவரின் உடலை புதிய பாதை வழியாக எடுத்துச் சென்று, அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்தியதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி பொதுவழிப்பாதை வழியாகவே எடுத்துச் செல்வோம் என்றும் முதியவரின் பேரன்கள் உறுதியாக தெரிவித்தனர்,
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 பேர், தங்களது உடலில் மண் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்தனர். தொடர்ந்து , பொதுப்பாதை வழியாக அவரின் உடலைக் கொண்டுசெல்ல முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.
பின்னர், காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள், வழக்கமான பாதையிலேயே (தலித் மக்கள் செல்லும், மழையில் சேதமாகி இருந்த வழக்கமான பாதை ) முதியவர் செல்லமுத்துவின் உடலைக் கொண்டு சென்று, அடக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதியவர் செல்லமுத்துவின் உறவினர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


