தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும்
ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன் என்று கூறிவருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். முதற்கட்டமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 09ஆம் திகதி பேசவுள்ள ஜனாதிபதி, மே 11, 12, 13ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பையும் விடுத்திருக்கிறார். வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் இந்தத் தந்திரத்துக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலியாக வேண்டாம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசுவதற்கு விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி விடுக்கும் அழைப்பொன்றைத் தமிழர்தரப்பு நிராகரிக்க முடியாது. அவர் தீவிர சிங்கள-பௌத்த மேலாதிக்க நிலைப்பாடு உடையவராக இருப்பினுங்கூட நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அவருடன் பேசியே ஆகவேண்டும். ஆனால், தனித்தனிக்கட்சிகளாக அல்லாது அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் உள்வாங்கி ஒருமித்த தமிழ்த்தேசியத்தின் குரலாகப் பேச்சுவார்த்தை மேடையில் அமருதல் வேண்டும். அப்போதே பேச்சுவார்த்தையை வலுவுடன் எதிர்கொள்ளமுடியும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வடக்குக்கான பிரச்சினையாகத் தென்னிலங்கை உருவகித்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்களிலும் அரச ஆதரவு நிலைபாடு உடையவர்களே அதிகம். இந்நிலையில் பேச்சுவார்த்தை மேடையில் வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பங்கேற்பது தமிழ்த்தேசியத்தின் குரலைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும்.

ரணில் விக்கிரமசிங்க தந்திரமான அரசியல் நகர்வுகளுக்கு மிகவும் பிரசித்தமானவர். நல்லாட்சிக் காலாத்தில் அவர் ஆரம்பித்த தீர்வுத்திட்டம் பிசுபிசுத்துப்போனதையும் நாடறியும். அவரது தற்போதைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பின் பின்னால் இருக்கக்கூடிய அபாயங்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழர்தரப்பில் தாமே பெரும்பாண்மை என்ற இறுமாப்பைப் புறந்தள்ளி, ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் கருத்துகளையும் உள்வாங்கித் தனது சந்திப்பின்போது பிரதிபலிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது சந்திப்பில் ஜனாதிபதி வடக்குக்கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனியாகச் சந்திக்கும் அழைப்பை அடியோடு நிராகரிக்க வேண்டும். வடக்குக்கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திப்பதற்கான கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டும். தவறின், ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரத்துக்கு முன்னால் மீண்டும் தோற்றவர்களாகிவிடுவோம். மீண்டும் மீண்டும் தவறிழைத்த தரப்பாகவே தமிழர்கள் இருந்ததாக வரலாறும் பதிவுசெய்ய நேரிடும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response