போட்டி போட்டு பாஜகவிடம் மண்டியிடுவதா? – அதிமுகவினர் மீது தமிழ் மக்கள் கோபம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

திமுக கூட்டணி சார்பில், 2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட காங்கிரசுக் கட்சியே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்து விட்டது. அதேநேரம், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமாகா, தற்போது அதிமுகவே போட்டியிடும் கூறி ஒதுங்கிக் கொண்டது.

அதிமுக சார்பில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், இரண்டு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையுமே அங்கீகரித்துள்ளது. இரண்டு பேரும் இணைந்து வேட்புமனுவில் கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தற்போது இருவரும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளதால் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளனர்.

சுயேட்சை சின்னத்திலாவது போட்டியிட்டு, அதிமுகவில் யார் பெரியவர் என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் களம் காண உள்ளனர். அதிமுக தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது இருவரும் தனித்தனியே போட்டியிட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்கக் காரணமாகி இருக்கின்றனர்.

அதோடு பலம் வாய்ந்த அதிமுகவினர் பாஜக அலுவலக வாசலில் காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது. இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் பாஜக அதிமுகவிடம் மண்டியிடும் என்பதுதான் உண்மை. ஆனால் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் குடுமியை பாஜகவிடம் கொண்டுபோய்க் கொடுத்திருப்பது அதிமுகவினரை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response