
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து அங்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதியை ஆளும் தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கி உள்ளது. இதனால் காங்கிரசுக் கட்சி சார்பில் யார் களம் இறங்குவார்? என்ற எதிா்பார்ப்பு நிலவியது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ்நாட்டுக்கான காங்கிரசு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் பேட்டி அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘நான் போட்டியிடவில்லை. எனது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் தினேஷ் குண்டுராவ் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துடன் தினேஷ் குண்டுராவைச் சந்தித்துப் பேசினார்.அப்போது சஞ்சய் சம்பத் தனது விருப்பமனுவைக் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது……
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரசு வேட்பாளர் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். சிலரை தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு ஆலோசித்தேன். அந்த முடிவை டெல்லியில் உள்ள கட்சித் தலைமைக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க உள்ளேன். எனவே டெல்லியில் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
இந்த இடைத்தேர்தலில் சோனியாகாந்தி, இராகுல்காந்தி ஆகியோர் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்.இங்கேயே நமது கட்சியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். எனவே இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த காங்கிரசாரும் முனைப்புடன் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதேபோல அந்தத் தொகுதி மக்களின் ஆதரவுடன் நிச்சயம் இடைத்தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எதிர்க்கட்சி வேட்பாளர் அறிவிப்பதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. யார் போட்டிக்களத்தில் இருக்கப் போகிறார்கள்? என்பதே தெரியவில்லை. நாங்கள் ஜனநாயக வழியில் வலிமையாகக் களமிறங்க இருக்கிறோம். எனவே வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அகில இந்திய காங்கிரசு தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இந்தத் தேர்தலில் முன்னாள் காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்ட நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘காங்கிரசு தலைமை என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்து உள்ளது. தலைமையின் முடிவை ஏற்கிறேன். தேர்தலில் காங்கிரசு அமோக வெற்றி பெறும்’ என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 74), ஈ.வி.கே.சம்பத்தின் மகன் ஆவார். இவருக்கு வரலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் சம்பத் ஆகிய 2 மகன்கள். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா திடீரென சனவரி 4,2023 ஆம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவராக 2 முறை பணியாற்றி இருக்கிறார். 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
