ஈஷா மையத்தில் 5 ஆவது மர்மமரணம் – தெய்வத்தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமானங்களைக் கடவுளின் பெயரால் எழுப்பி, ஆன்மிகத்தை வணிகமயமாக்கி இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் தொழிலாக மாற்றுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவித்து வரும் ஈஷா மையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், ஈஷா மையத்தில் பயிற்சிக்குச் சென்ற இளம்பெண் சுபசிறீ, மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும், ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,நேற்று (03.01.2023) மாலை கோவை வடவள்ளியில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை கோவை அமைப்பாளர் பேராசிரியர் சௌ.காமராசு தலைமை தாங்கினார். கோவை த.தே.பே. திருவள்ளுவன், அவிநாசி செயலாளர் பிரசாந்த் ஆகியோர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பா.கோபாலகிருட்டிணன், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் இமயம் சரவணன், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் கார்த்திகா, பொறிஞர் வேலுச்சாமி, பவானி பொதுமையர் அமைப்பு இரணியன், தோழர் செல்வராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பே. கோவை இராசேசுக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பவானி செயலாளர் நந்தக்குமார் உள்ளிட்ட திரளான தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், தமிழ் அன்பர்களும் பங்கேற்றனர்.

இளம்பெண் சுபசிறீ மட்டுமின்றி, ஏற்கெனவே ஜக்கி வாசுவேவின் மனைவி விஜி, ஈஷாவின் முன்னாள் நிர்வாகி ஆடிட்டர் திலீப், பழங்குடியின இளைஞர் இராஜேஷ்குமார், விவசாயி ஓதிச்சாமி என ஈஷாவுடன் தொடர்புடைய பலர் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், இளம்பெண் சுபசிறீயின் மரணம் ஈஷா யோகா மையத்தின் மீதான ஐயத்தையே உறுதிப்படுத்துகிறது. ஏற்கெனவே இதுபற்றிய ஆதாரங்களை “ஈஷாவின் மறுபக்கம் – குற்றச்சாட்டுகளும் ஆவணங்களும்“ என்ற நூலாக அருணபாரதி தொகுத்து வெளிக் கொண்டு வந்துள்ளார் (நூல் வேண்டுவோர் அழைக்க 9840848594).

Leave a Response