சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சை வழங்காததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் ஆம் ஆத்மி – இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 30 அன்று நடைபெற்றது.
அதில்,திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரசுத் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரசு மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது….
மோடி தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி மக்கள் ஆதரவளித்ததால் அமைக்கப்பட்டது அல்ல. 400 இடம் என்று போதித்து, பொய் பிரச்சாரம் செய்து அப்படியும் வெல்ல முடியாமல் இன்றைக்கு மைனாரிட்டி அரசாக மோடி அரசு இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த தவறுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர்.
பிரதமர் மோடி இந்தப் பகுதியில் ரோடு ஷோ நடத்தினர். ஒருமுறைக்கு எட்டு முறை வந்தார். 800 முறை வந்தாலும் தமிழத்தில் இடமில்லை என்பதை இங்குள்ள கட்சிகள் நிரூபித்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி சந்தேகமாக உள்ளது.கோயபல்ஸ் பிரசாரங்களை செய்து ஆட்சிக்கு வந்த பின்னரும் மைனாரிட்டி அரசாகத் தான் இருக்கிறது. பிரதமர் மோடி கொஞ் சநஞ்ச பொய்யா சொன்னார். தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் திருடன் என்று கூறினார். பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மோடி, அமித்ஷா பேசியது உங்களுக்குத் தெரியும். எனவே ஒன்றிய பாஜக ஆட்சியானது, அடுத்த நாடாளுமன்றம் கூடும் வரை இருக்கிறதா என்பதே சந்தேகமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் நிதிஷ்குமார் தற்போது தனது சுயரூபத்தை காட்டி விட்டார்.
டிசம்பர் மாதம் வரை பார்ப்பார், பின்னர் ஆட்சியைக் கவிழ்த்து விட வாய்ப்புள்ளது. பாஜக அரசு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே.
அரவிந்த் கேஜ்ரிவால் என்ன ஊழல் செய்தார்… எத்தனை மாதங்கள் ஆகிறது? தேவையில்லாமல் அவரை சிறையில் வைத்து உள்ளனர். அவருக்குப் போதுமான மருத்துவ வசதிகூட தரப்படவில்லை. இப்படி எல்லாம் கொடுங்கோல் ஆட்சி செய்தவர்கள் நீண்ட நாள் ஆட்சியில் இருந்தது இல்லை. கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயக்கூடாது.அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் எந்தெந்தத் தலைவர்களைத் தவறாகக் கைது செய்துள்ளனரோ, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறும் வரை இந்த அணி தொடர்ந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரசுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்….
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த ஆட்சி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது, அது வென்றே தீரும். அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டு வருவார். பாசிசத்திற்கு எதிராக, மோடிக்கு எதிராக குரல் கொடுப்பார் என்றார்.