கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட வடமாவட்டங்களில் இடைவிடாது பேய்மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான ச.பென்னிகுயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஆதிவாசிகள் நிறைந்த வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி தாலுகாவில், எங்கு பார்த்தாலும் நேற்று (ஜூலை 30,2024) காலை முதல் அழுகுரல்கள் ஓயவில்லை.
2019 ஆம் ஆண்டு இதே வயநாடு மாவட்டம், புத்துமலை எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் மடிந்து அழிந்த அந்த துயரத்தை மறக்கும் முன்னர், தற்போது மறுபடியும் வயநாடு க(த)ண்ணீரில் தத்தளிக்கிறது.
வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாலுகாவில் உள்ள, வெள்ளரிமலை- முப்பிடி- முண்டகை- சூரல்மலை- அட்டமலை- நூல் புழா உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 2 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலச்சரிவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
4.30 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலச்சரிவில் கிட்டத்தட்ட முண்டகை, சூரல்மலை ஆகிய இரண்டு கிராமங்களும் வயநாடு மாவட்டத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாத காலமாகவே நீலகிரி மாவட்டத்தில் இருந்து வயநாடு மாவட்டத்திற்குள் செல்லும் சாலியாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்தே வந்திருக்கிறது. இடைவிடாத சாரல், வெள்ளத்தை அதிகப்படுத்திய நிலையில் தான்,நேற்று அதிகாலை சூரல்மலையை அடுத்துள்ள பொதுக்கல்லூர், கும்பலா பாறை, இருட்டுக்குட்டி காலனி மக்கள், சாலியாற்றில் அடித்து வரப்பட்ட கார்களை கண்ணுற்று,அவர்கள் தான் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான், அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் சூரல்மலை மற்றும் முண்டகை, வெள்ளரிமலை கிராமங்களைத் தொடர்பு கொண்ட போது, தொடர்பு அறுந்து போயிருந்ததை அறிந்ததும்தான் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால் மேற்படி மூன்று கிராமங்களை இணைக்கும் பெரிய பெரிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் அச்சம் பரவியது. தற்போது வரை நூற்றுக்கு மேற்பட்ட உடல்கள் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையால் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீதி உடல்கள் மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
கடவுளின் தேசத்தில் என்றைக்கு சுற்றுலா மாஃபியாக்கள் களத்தில் இறங்கினார்களோ, அன்றே வயநாடு அவர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.
கேரள மாநிலம் ஒரு சமவெளியில் இணைக்கப்பட்டிருந்தாலும், வயநாடு மட்டும் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு மாவட்டமாகும். வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களை கொண்ட இந்த வயநாடு மாவட்டம், தமிழகத்தோடும், கர்நாடகத்தோடும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரு மாவட்டமாகும்.
இடுக்கி மாவட்டத்தைத் தவிர்த்து இந்த வயநாடு மாவட்டத்தில் தான் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் இருக்கிறது.
அந்த தேயிலையை மையப்படுத்திய தனியார் சுற்றுலா மாபியாக்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தங்கள் கைப் பிடிக்குள் கொண்டு வந்ததோடு,எங்கு நோக்கினும் கட்டிடங்களைக் கட்டியதோடு, சுற்றுலாவில் எத்தனை விதமான வடிவங்கள் இருக்கிறதோ, அத்தனை விதமான வடிவங்களையும் வயநாட்டிற்கு இறக்குமதி செய்து இருக்கிறார்கள்.
தடுக்கி விழுந்தால் ஒரு சொகுசு விடுதியில் தான் விழ வேண்டும் என்கிற அளவிற்கு வயநாடு மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாவிலும், சொகுசு விடுதிகள் நிறைந்து கிடக்கின்றன.
2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி புத்துமலை கிராமத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சூரல்மலை,வயநாடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.
விடுமுறைக் காலங்களில் இலட்சக்கணக்கில் இந்த சூரல்மலையில் சுற்றுலா வாசிகள் குழுமும் அளவிற்கு அத்தனை அடிப்படைக் கட்டமைப்புகளும் அங்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
அளவுக்கு அதிகமான கட்டுமானங்களும், ஆண்டுக்காண்டு பெருகும் சுற்றுலாக் கூட்டமும், பருவம் தப்பிய மழைகளும்,வெறும் நிலத்தடி நீருக்காக மட்டுமே கேரளா போராடிப் பெற்றிருக்கும் நீலகிரி மாவட்டத்தின் சாலியாறும் தான் பிரச்சனைகளுக்கு மூல காரணம்.
வயநாடு மாவட்டத்தில் சுற்றுலாவை அனுமதிக்க மாட்டோம் என்று 2006 காலகட்டங்களில் சி.கே.ஜானு என்கிற ஆதிவாசி தலைவியின் தலைமையில் போராட்டம் வெடித்த போது, ஏ.கே.அந்தோணியினுடைய அரசாங்கம், ஆதிவாசி மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கியது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பிறகு,வயநாடு மாவட்டம் அரபு நாட்டு கருப்புப் பண முதலைகளுக்கு வலுக்கட்டாயமாகத் திறந்து விடப்பட்டது. அந்தக் கருப்புப் பண முதலைகளின் முதலீடுகள் குவியக் குவிய வனம் நிறைந்த வயநாடு கட்டிடங்கள் நிறைந்த வயநாடாக மாறியது.
வகை தொகை இல்லாமல் மலைச் சரிவுகளிலும்,மலை உச்சியிலும் தொங்கு கட்டிடங்களாக கட்டப்பட்ட கட்டிடங்கள் தான், இந்த நிலச்சரிவுக்கான முதல் காரணம்.
ஆதிவாசி மக்கள் மட்டுமே இருக்கும் வரை வயநாட்டிற்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் குடியேற்றங்கள் பெருகப் பெருக வயநாடு அந்தரத்தில் தொங்க ஆரம்பித்தது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஒன்றிரண்டு அமைச்சர்கள் தான் நான்காவது நாள் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இன்று வயநாட்டில் ராஜன்,ஏகே சசிந்திரன், கடனப்பள்ளி ராமச்சந்திரன், முகமது ரியாஸ், கேலு, ஐ சி பாலகிருஷ்ணன், டி சித்திக் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் நேற்று மாலையே வயநாடு சென்று சேர்ந்து விட்டார்கள்.
துணை இராணுவப் படையும் களத்தில் நிற்கிறது. பேரிடர் மேலாண்மை மீட்புப் படை, வயநாடு மாவட்ட ஆட்சியர் டி ஆர் மேகஸ்ரீ, ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள்.
மீட்கப்பட்ட 128 பேர், நிலம்பூர் தாலுகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில் சம்பவம் நடைபெற்ற சூரல்மலை கிராமத்தில் இருந்து,25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தின் பொதுகல் கிராமத்தில் ஓடும் சாலியாற்றிலிருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பது பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயநாடு மாவட்டத்திற்குள் பிற நபர்கள் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 88 48 44 66 21—-944 66 82 300 ஆகிய இரண்டு எண்கள் தொடர்புக்காக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வைத்ரி, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களிலும் பதற்றம் நீடிக்கும் நிலையில், மழை நிற்க வேண்டும், ஆற்றில் வெள்ளம் குறைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.