கனமழை – எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வட இலங்கை கடற்கரைப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response