நடைமுறைக்கு வந்தது இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம் – தண்டனை விவரங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அக்டோபர் 19,2022 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இணையதளச் சூதாட்டத் தடைச் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இனிமேல் இணையதளச் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10 இலட்சம் தண்டம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இணையதளச் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகி இளைஞர்கள். மாணவர்கள், குடும்ப தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.
காவல் துறையைச் சேர்ந்தவர்கள்கூட தற்கொலை செய்து கொண்டனர்.

எனவே, தமிழ்நாட்டில் இணையதளச் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையதளச் சூதாட்டத் தடை மற்றும் இணையதள விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இதற்கிடையில், அரசு சார்பில் 2 இலட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் இணையதள விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதாக 70 விழுகாடு ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதாக 67 விழுக்காடு பேரும், மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனைத் திறன், எழுத்துத் திறன் குறைந்திருப்பதாக 74% பேரும், மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாக 76% பேர், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதாக 72 % ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இணையதளச் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டன. இதில் 99 விழுக்காடு பேர், அதாவது 10 ஆயிரத்து 708 பேர் இணையதளச் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இணையதளச் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்ட முன்வடிவு கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இணையதள ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கான, சட்டமுன்வடிவு அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அந்த சட்டமுன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அந்த சட்டமுன்வடிவு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் தடைச் சட்டம் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து இணையதளச் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாகக் கருதப்படும் அனைத்து இணையதள விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகிறது. எந்தவொரு இணையதள விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தைப் புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய இணையதள விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இணையதள சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது. எந்தவொரு இணையதள விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச்சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு இரத்து செய்யப்படும்.

இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டுக் குழுவை, ஒரு தலைவர் (உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும். உள்ளூரில் இல்லாத இணையதள விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு இணையதள சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து இணையதள விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரைத் தடை செய்வதற்கு ஒன்றிய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

இணையதளச் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையதள விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ 5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ5 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இணையதளச் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையதள விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ10 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.இணையதளச் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையதள விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும், அபராதம் ரூ20 இலட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response