இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம் இந்திய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1 ஆம் நாள்! இதுவே தமிழ்நாடு நாள்!
தமிழ்நாடு பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்…..
சங்க காலத்திலிருந்து மன்னர்கள் ஆட்சியில் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்த தமிழகம், ஆங்கிலேயர் ஆட்சியில் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் என்னும் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தது.
1956 ஆம் ஆண்டு நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு முதன்முதலாக அமைந்தது. அந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
தமிழ்நாடு உருவாகவும், நமது எல்லைப் பகுதிகளை மீட்பதற்காகவும் உயிர் ஈகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோமாக.
சாதி – சமய வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை உணர்வை ஒன்றுபட்டு நின்று மேலும் வளர்ப்போமாக.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.