அறிஞர் அண்ணாவின் திட்டத்தை அறியாமல் மு.க.ஸ்டாலின் செய்த செயல் – புலம்பும் மூத்த திமுகவினர்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) நேரடி நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இனி இந்தப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே நேரத்தில் கல்வித் தகுதியிலும் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில்…..

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(விளம்பரம்)(ஏபிஆர்ஓ) பணியிடங்கள் தமிழ்நாடு பொது சார்நிலை பணி தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியிடங்களாகும்.

அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளச் செய்தல். படக்காட்சிகள் நடத்தப்படும் இடங்களில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளக்கமாக எடுத்துக் கூறுதல், அரசு வெளியிடும் செய்திகளை உடனுக்குடன் மக்கள் அறியும் வண்ணம் சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தல் ஆகிய முக்கிய பணிகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வப்பொழுது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம், மக்கள் தொடர்புத் துறையில் 2 ஆண்டு அனுபவம். தமிழ், ஆங்கிலத்தில் கணினி, தட்டச்சு படித்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இனி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா, விசுவல் கம்யூனிகேசன், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ(ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா சயின்ஸ்) படித்திருக்க வேண்டும்.

மேலும் 5 ஆண்டு ஜெர்னலிசம், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களுங்களை நிரப்புவதற்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு, பணிமாறுதல் இடையே 1:1 என்ற விகிதாசாரத்தில் (50 சதவீதம் நேரடி நியமனம்,50 சதவீதம் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்) நிரப்பப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறை விதிகள் மற்றும் இப்பணியிடத்திற்கான தற்காலிக விதிகளில் உரிய திருத்தங்கள் தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக அரசின் இந்த உத்தரவுக்கு திமுகவைச் சேர்ந்த முன்னோடிகளே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

திமுகவின் மூத்தோர் ஒருவர் இது தொடர்பாகக் கூறியதாவது…

அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் இந்தப்பணிக்கு நம்முடைய கொள்கையைப் பின்பற்றுகிறவர்களை நியமித்தால்தான் நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைச் சரியாகக் கொண்டுசெல்வார்கள் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா.

இப்போது அந்தப் பணியைத் தேர்வாணையத்தின் பகுதி 1 இல் சேர்த்திருப்பதால் அதில் பார்ப்பனர்கள் அதிக அளவில் இடம்பிடிப்பார்கள். அவர்கள் திராவிட மாடல் கொள்கைகளை மக்களிடம் சொல்லமாட்டார்கள். அதற்கு எதிர்நிலையில் செயல்படுவார்கள்.

மூச்சுக்கு முன்னூறுமுறை திராவிடமாடல் என்று பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது சரியல்ல

என்று அவர் கூறுகிறார்.

முதலமைச்சர் கவனிப்பாரா?

Leave a Response