சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காங்கிரசு, தமாகா ஆகிய கட்சிகளோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பங்கேற்றார். ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.
அவர், சென்னையில் இருந்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கூறி, அந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.
ஆனால் அப்போது, விருந்தில், எடப்பாடி பழனிச்சாமி வேண்டும் என்றே கலந்துகொண்டார்.
இப்போது நேற்று நடந்த விருந்தை அவர் புறக்கணித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக பாஜக மீது எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் உள்ளாராம்.
தன்னை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவை எச்சரிக்கும் வகையிலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். அதேநேரத்தில், அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும்வரை அமைதியாக இருப்பது. தனக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்திலோ, அல்லது தனக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தாலோ பாஜகவுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என்று கூறப்படுகிறது.