சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்குக – தெய்வத்தமிழ்ப்பேரவை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும், செங்கல்பட்டு ஓக உயராய்வு மையத்திற்கு திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில், நேற்று (08.08.2022) – சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் வே.பூ.இராமராசு (திருச்சி), வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் (புதுச்சேரி), க.விடுதலைச்சுடர் (குடந்தை) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீட – வட குரு மடாதிபதி குச்சனூர் கிழார், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி. கலையரசி நடராசன் அம்மையார், வள்ளலார் பணியகம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் க.இராசமாணிக்கனார், பூதலூர் ஒருங்கிணைப்பாளர் மு.சுந்தரராசு, ஆசீவகம் சமய நடுவம் நிறுவனர் முனைவர் ஆசீவக சுடரொளி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சிவ.வடிவேலன் (சென்னை), முனைவர் வே.சுப்பிரமணிய சிவா (சிதம்பரம்), கா.பொன்னுசாமி (வத்தலகுண்டு), புதுக்கோட்டை மாவட்டம் – நெய்வேலி சன்மார்க்கச் சங்க மையம் இரா.முத்தையா, பேராசிரியர் சௌ.காமராசு (மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலை காப்பு இயக்கம்), முத்தம்மாள் (வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம்), திருப்பத்தூர் ஆன்மிகச் செயல்பாட்டாளர் ஓம்பிரகாசு, மகளிர் ஆயம் துணைத் தலைவர் செம்மலர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். க.அருணபாரதி ஒருங்கிணைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ஆண்கள் – பெண்கள் எனத் திரளான ஆன்மிகர்களும், செயல்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

Leave a Response