இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கமல் உதவியா? – ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் ஜூலை 24 அன்று, இலங்கை தூதரக துணை உயர் ஆணையரரான துரைசாமி வெங்கடேஸ்வரனைச் சந்தித்து அங்குள்ள பிரதிநிதிகளுடன் உரையாடினார்.

இதுதொடர்பாக நிகழ்ச்சிகள் வடிவமைப்பாளர் அஜீத் ஜேசுதாசன் எழுதியுள்ள பதிவில்…..

டெபுடி ஹை கமிசனர் டாக்டர் துரைசாமி வெங்கடேசுவரன் அழைப்பின் பேரில் பிரபல தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குநருமான ‘பத்ம பூஷன்’ கமல் ஹாசன், 24.07 2022 அன்று மிஷன் வரலாற்றில் முதல் முறையாக சென்னை தூதரக அலுவலகத்துக்கு வருகை தந்தார். இந்த விஜயத்தில் திரு.கமல்ஹாசன் துணை உயர் ஆணையாளருடன் இலங்கையின் இயற்கை அழகையும் சினிமா துறையும் பற்றிக் கலந்துரையாடினார். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திரைப்பட சகோதரத்துவம் மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கைக்கு வருகை தருமாறு துணை உயர் ஆணையாளர் திரு கமல்ஹாசனிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், திரு.ஹாசன் தனது நற்பணி இயக்கத்தின் ஊடாக ‘இலங்கைக்கு ஆதரவளிக்க’ விருப்பம் தெரிவித்தார். கலந்துரையாடலுக்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன் மிஷனின் அனைத்து ஊழியர்களுடனும் நட்புடன் உரையாடினார்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஈழத்தமிழர்களின் பெயரையும் சொல்லி உலகெங்கும் உதவி பெற்றாலும் அவை சிங்களமக்களுக்கே கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு எங்களுக்காகக் கொடுத்த உதவிப் பொருட்களில் மிகச் சொற்பமே எங்களை வந்தடைந்தது.

எனவே, நடிகர் கமல்ஹாசன் உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு உதவ விரும்பினால் சிங்கள அரசின் மூலம் அதைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்வாரானால் அது தமிழ் மக்களுக்குச் சேராது.

அதுமட்டுமின்றி இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவுமாறு கமலிடம் கேட்டிருக்கிறார்கள்.

சிங்கள அரசியலில் இவ்வளவு குழப்பங்கள் நடக்கின்ற போதிலும் ஒட்டுமொத்த நாடே அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு சிங்கள அரசு நடத்திவருகிறது.இலங்கையின் சுற்றுலாத்துறைக்குக் கமல் உதவி செய்தால் அதன்பலனும் சிங்கள மக்களை மட்டுமே சென்றடையும்.தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

எனவே, ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்ய கமல் விரும்பினால் சர்வதேச தொண்டுநிறுவனங்கள் உதவியோடு நேரடியாகச் செய்வது நல்லது

இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response