சிங்கள மக்கள் போராட்டம் – பெட்டி பெட்டியாக தங்கம் மற்றும் பணத்துடன் ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்குப் பயந்து தப்பி ஓடி விட்டார். மக்கள் தங்கள் உச்சகட்டக் கோபத்தைக் காட்டும் வகையில், கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து அதிபர் மாளிகையைக் கைப்பற்றி உள்ளனர்.

இதனால் மக்கள் எதிர்ப்பாலும், எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடியாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பு கரைந்ததால், இலங்கை அரசால் சர்வதேசச் சந்தையில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வாங்க முடியாமல் ஒட்டுமொத்த நாடே முடங்கி உள்ளது.

நாட்டின் இந்த மோசமான நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என இலங்கை மக்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த மே மாதம் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது, ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடு உட்பட ஆளும் கட்சி எம்பிக்கள் பலரின் வீடுகளை பொதுமக்கள் எரித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

இதனால், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

மக்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து, அவர் இராணுவத்திடம் தஞ்சம் புகுந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மே 12 ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். ரணில் பதவியேற்ற பிறகும் நாட்டின் நிலைமை முன்னேறவில்லை.

இந்தியாவைத் தவிர வேறெந்த உலக நாடுகளும் உதவ முன்வரவில்லை. குறிப்பாக, கோத்தபய அரசு இருக்கும் வரை எந்த உதவியும் செய்ய முடியாது என உலக நாடுகள் சில வெளிப்படையாகவே கூறின.

அதோடு கோத்தபயவுக்கு ஆதரவாகவே ரணில் செயல்பட்டு வந்தார். இதனால், ரணில் ஆட்சி மீதும் இலங்கை மக்கள் வெறுப்படைந்தனர். இந்நிலையில், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் பதவி விலகக் கோரி மக்கள் நடத்தும் போராட்டம் நேற்று முதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வழக்குரைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொழும்பு நோக்கிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

தொடர்வண்டிகள், சுமையுந்துகள், பேருந்துகள் மூலமாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தலைநகர் கொழும்பிற்கு ஏராளமான மக்கள் படையெடுத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்புவைச் சுற்றி 7 இடங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால், இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது.

இதனால் திட்டமிட்டபடி நேற்று காலையில் அதிபர் மாளிகை நோக்கி போராட்டக் குழுவினர் முன்னேறினர். இலட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்தனர். சதம் தெரு, தாமரை சாலைப் பகுதிகளில் போராட்டக்காரர்களை தடுக்கக் காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் மக்களை விரட்ட முயன்றனர். ஆனால், மக்கள் புரட்சி வெடித்த நிலையில், யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து முன்னேறிய போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து, சூறையாடி அங்கு தேசியக்கொடி ஏற்றினர்.

அதிபரின் தலைமைச் செயலகத்தையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் அங்கிருந்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் செய்வதறியாமல் திகைத்தனர். அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தபோது, கோத்தபய அங்கு இல்லை.

இலங்கை வரலாற்றில் இதுவரை நடந்திராத இத்தகைய போராட்டம், ரணில் அரசை அதிர்ச்சி அடைய வைத்தது.
நாட்டில் அசாதாரண நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு அதிபர் கோத்தபய கட்டுப்படுவதாக தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிபர் கோத்தபயவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டுமென பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். கோத்தபயவை பாதுகாக்கும் ரணிலை இடைக்கால அதிபராக நியமித்தால், மக்கள் கொதிப்படைந்து, நாடாளுமன்றத்தையே தரை மட்டமாக்கி விடுவார்கள் என பல்வேறு கட்சித் தலைவர்கள் எச்சரித்தனர். கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக முதலில் மறுப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடியாலும், மக்களின் போராட்டத்தாலும் அவர் பதவி விலக சம்மதம் தெரிவித்தார். அனைத்துக்கட்சி தலைமையில் புதிய அரசு அமைய வழிவிடும் வகையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலகுவதாக டிவிட்டரில் அறிவித்தார்.

புதிய அரசு அமையும் வரை அவர் பிரதமர் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலால் இலங்கை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தால், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்கூட்டியே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடி இருந்தார். அதோடு, அதிபர் அலுவலகத்தின் முக்கிய கோப்புகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தன. தற்போது கோத்தபய இரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார். அதே சமயம், கோத்தபய உட்பட ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கடந்த சில நாட்களாகவே கோத்தபய ராஜபக்சே பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. எனவே, அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். அதே போல, கொழும்புவில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் சொந்த வீட்டின் முன்பாகவும் போராட்டக்காரர்கள் கண்டன கோஷமிட்டனர். அங்கிருந்து அவர்களை விரட்ட காவல்துறையினர் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், பிரதமரின் வீட்டை தீ வைத்துக் கொளுத்தினர்.

கொழும்புவில் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் தாமாக முன்வந்து இணைந்த சம்பவங்களும் நடந்தன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட காணொலி பதிவு ஒன்றில், இராணுவ சீருடை அணிந்த வீரர் ஒருவர், மக்களுடன் வந்து தனது சீருடையைக் கழற்றி, போராட்டத்தில் இணைகிறார். மற்றொரு காணொலியில்,துள்ளுந்தை ஓட்டி வந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் திடீரென அதை நிறுத்தி விட்டு, அரசுக்கு எதிராகவும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் முழக்கமிடுகிறார். மேலும் பல காவல்துறையினரும், இராணுவத்தினரும் மக்களைக் கட்டுப்படுத்தாமல், மறைமுகமாகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். அதற்கு முன்பாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டாலும், போராட்டக் களத்தை விட்டு நகர மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த அனைத்து அறைகளையும் சுற்றிப் பார்த்தனர். சிலர் வீட்டிற்குள் இருந்த பிரமாண்ட நீச்சல் குளத்தில் குதித்து விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். பலர் சமையல் கட்டுக்குள் சென்று அங்கிருந்து உணவுப் பொருட்களை ருசித்தனர். அங்கேயே சமையலும் நடந்தது. சமைக்கப்பட்ட உணவு, போராட்டக்காரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டது.
மேலும், கோத்தபயவின் படுக்கை அறையிலும் பலர் புகுந்து அங்கிருந்த பஞ்சு மெத்தையில் ஹாயாக படுத்து செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த டிவியை போட்டு போராட்டக்கள நிகழ்வுகளை நேரலையில் பார்த்தனர்.

போராட்டம் தீவிரமாக நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்ததால், அதிபர் மாளிகையில் எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் காலி செய்திருந்தனர். அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள் பலரும் செல்போனில் காணொலி எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பினர்.

மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், நேற்று கொழும்பு துறைமுகத்தில் 2 போர்க்கப்பலில் சிலர் அவசர, அவசரமாக ஏராளமான பெட்டிகளை ஏற்றினர். அடையாளம் தெரியாத சிலர் கப்பலில் ஏறிச் சென்றுள்ளனர். இவர்கள் ராஜபக்சே குடும்பத்தினர் என சந்தேகிக்கப்படுகிறது.

பெட்டி பெட்டியாக தங்கக் கட்டிகள் மற்றும் பணத்துடன் கப்பலில் வெளிநாடு தப்பியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு, கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி, ஏராளமான சொகுசு கார்களும் நேற்று விரைந்தன. இந்த விமானம் மூலமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே துபாய் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கப்பலில் பெட்டிகளை ஏற்றும் காணொலிகளும், கொழும்பு விமான நிலையத்தை நோக்கி கார்கள் விரைந்த காணொலிகளும் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன.

Leave a Response