சொத்துவரி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தெரியவில்லையா? – அதிமுகவுக்கு மக்கள் கேள்வி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.

அதேபோல் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

சொத்துவரி உயர்வை எதிர்ப்பது நூறு விழுக்காடு சரியானதுதான். அதேசமயம் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அது அதிமுகவின் கண்களுக்குத் தெரியவில்லையா? அதற்காகப் போராட்டம் நடத்த மாட்டீர்களா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

Leave a Response