9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – களைகட்டிய வாக்குப்பதிவு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

இந்தத் தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் இருந்தனர்.

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணைநல்லூர், வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா, திருப்பத்தூர் மாவட்டத்தில் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழபாவூர், மேல நீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடந்த பகுதிகள் திருவிழா போன்று களைகட்டியது.

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி ரீதியாக போட்டி என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரும் பம்பரமாகச் சுழன்று சம்பந்தப்பட்ட பகுதிகளின் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சில இடங்களில் இரவு 7 மணிக்குப் பிறகும் வாக்குப்பதிவு நடந்தது. ஒருசில இடங்களில் நடைபெற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் ராமையன்பட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாலை 6 மணி அளவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதையடுத்து அங்கு நின்றிருந்த 136 ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் நேற்று இரவு வரை காத்திருந்து வாக்களித்து சென்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 37 வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது.

பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னரும் 145 வாக்காளர்கள் ஓட்டுப் போடக் காத்திருந்தனர்.

அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதாவது, வரிசையில் கடைசியில் நின்றவரிடம் தொடங்கி இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஊனமுற்றோருக்கான வீல் சேர் தயார்நிலையில் இருந்தன. வயதானவர்கள், ஊனமுற்றோர்களை வாகனங்களில் அழைத்து வந்த உறவினர்கள் வீல் சேர் மூலம் அவர்களை வாக்குப்பதிவு மையத்துக்குள் அழைத்து சென்று வாக்களிக்க வைத்தனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வந்த கிராமத்தினரும் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 7.72 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணிக்கு 19.61 சதவீதமும், 1 மணிக்கு 33.78 சதவீதமும், 3 மணிக்கு 52.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மாலை 3 மணிக்கு மேல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகின என்பதை இரவு 9 மணி வரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தால் பதிவான வாக்குகள் சதவீதத்தை விரைவில் தெரிவிக்கமுடியும் என்றும், வாக்குச்சீட்டு முறை என்பதாலும், சில இடங்களில் வாக்குப்பதிவு இரவு நீண்டநேரம் வரை நீடித்ததாலும் வாக்குப்பதிவு சதவீதத்தை கணக்கிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.

நேற்று நடந்த வாக்குப்பதிவில் 17 ஆயிரத்து 130 போலீசார், 3 ஆயிரத்து 405 ஊர்க்காவல்படையினர் உள்பட 39 ஆயிரத்து 408 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்குப்பதிவை கண்காணிக்க ஆயிரத்து 123 வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆயிரத்து 135 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடுவது வீடியோ பதிவு செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 318 வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவை சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வெப் கேமரா மூலம் சென்னையில் இருந்தபடியே வாக்குப்பதிவை அதிகாரிகள் பார்வையிட்டனர். மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி வாயிலாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற ஓட்டுப்பதிவை அவ்வப்போது கண்காணித்தார்.

பல வாக்குச்சாவடி மையங்களில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இரவு 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.

இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதைத்தொடர்ந்து 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Leave a Response