வைப்பகங்களில் வீடு, வாகனம் ஆகியனவற்றுக்காகக் கடன் பெற்றவர்கள் மற்றும் ஆயுள்காப்பீடு போன்றவற்றிற்கு மாதாமாதம் பணம் கட்டுகிறவர்கள் பெரும்பாலோனோர், குறிப்பிட்ட தேதியில் தாமாகவே வைப்பகக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலச் செய்திருப்பார்கள்.வைப்பங்களும் அந்தத் தேதியில் பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிவிடும்.
இதனால், சில சமயங்களில், அவசரத் தேவைக்கு பணம் இருப்பு வைக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, ஆட்டோ டெபிட் மூலம் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இந்தச் சூழலில் ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்படாது எனும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
அதன்படி ஒரு சேவை முடியப்போகிறது என்றால், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ அறிவிப்பு சென்றடையும். அவ்வறிவிப்பில் வாடிக்கையாளின் பெயர், கட்டண விவரம், எதற்கான தொகை என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.
அதற்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்திலேயே அந்த பணபரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும். 5 ஆயிரம் ரூபாய்க்குக் கீழே உள்ள பணபரிவர்த்தனைக்கு மட்டும், ஆர்.பி.ஐ-யால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் ரூபாய் மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், ஓடிபி எனும் ஒருமுறைகுறிச்சொல் மூலம் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்.
கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆர்.பி.ஐ. ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்தது.
செப்டம்பர் 30 ஆம் தேதியோடு அந்த அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதிமுதல் அதாவது இன்றுமுதல் அந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.