முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? – அதிரவைக்கும் பட்டியல்

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கே.சி. வீரமணிக்குச் சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய 35 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இவற்றில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் பங்குதாரர்கள், உறவினர்கள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இலஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இன்று காலை முதல் நடந்த சோதனையின்போது, 34.01 இலட்ச ரூபாய் பணம், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டாலர், 4,987 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள், ரோல்ஸ்ராய்ஸ் உட்பட 9 சொகுசு மகிழுந்துகள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 30 இலட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை தனது வீட்டில் அமைச்சர் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு இலஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Response